கோவை ரயில் பாதையில் ஏ ஐ கேமரா; ஐநா குழு ஆய்வு

கோவையில் இருந்து கேரளாவிற்கு போத்தனூர், எட்டிமடை வாளையார் வழியாக இயக்கப்படும் ரயில்கள், வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக மதுக்கரை எட்டிமடை பகுதியில் ஏ பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் ஏ ரயில் பாதை 29 கி.மீ தூரமும், பி ரயில் பாதை 4.15 கி.மீ தூரமும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன.இதேபோல கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ரயில் பாதைகள் வனப்பகுதி வழியாக செல்கின்றன.

இதனால் ரயில் தண்டவாளத்தில் வரும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வந்தன. மதுக்கரை முதல் கஞ்சிகோடு வரையிலான பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன.

இதனை தடுக்க பாலக்காடு ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அதிகமாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பி.ரயில் பாதையில் வாளையாறு – எட்டிமடை இடையே இரண்டு இடங்களில் காட்டு யானைகள் கடந்து செல்வதற்காக சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்டறிந்து எச்சரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக 12 டவர்கள் அமைக்கப்பட்டு, 24 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 7.05 கி.மீ தூரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

யானைகள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வரும் போது, கட்டுப்பாட்டு அறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கும், வனத்துறையினருக்கும், லோகோ பைலேட்டிற்கும் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

இதனால் லோகோ பைலட் ரயிலின் வேகத்தை குறைத்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ரயில் தண்டவாள பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வனப்பணியாளர்கள் காட்டு யானைகள் தென்பட்டால் விரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் முன்னோடி திட்டமாக விளங்கும் ஏஐ அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுக்கரை ரயில் பாதையில் எந்த ஒரு காட்டு யானை உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதேபோல இதுவரை சுமார் 6 ஆயிரம் முறை யானைகள் பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்து சென்றுள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பினர் மதுக்கரையில் உள்ள ஏஐ கட்டுப்பாட்டு மையத்தில் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இன்றுநேரில் பார்வையிட்டனர்.

அப்போது ரயில் தண்டவாளத்தை காட்டு யானைகள் கடக்கும் போது கட்டுப்பாட்டு அறை எப்படி செயல்படுகிறது, காட்டு யானைகள் எவ்வாறு பாதுகாப்பாக ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றன உள்ளிட்டவை குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் அவர்களுக்கு விளக்கினார். 7.50 கோடி ரூபாய் செலவில் இந்த ஏ ஐ கேமரா கண்காணிப்பு திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *