கோவை வந்தார் நடிகர் விஜய்..!


தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் இன்று நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார். கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயை காண ரசிகர்கள் சிலர் திரண்டனர். அவரை நோக்கி தளபதி தளபதி என கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரிகார்ட் வைத்து ரசிகர்கள் விஜய் இருக்கும் இடம் நோக்கி வராமல் தடுத்தனர். விஜய் அவர்களை நோக்கி கையை அசைத்தபடி சிரித்து கொண்டே காரில் ஏறி சென்றார். அவருடன் பாதுகாவலர்கள் மற்றும் கட்சியினர் 4 காரில் பின் தொடர்ந்து சென்றனர். விஜய் நீலாம்பூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவார், மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களை தமது கட்சியில் சேர்ப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஓட்டலுக்கு செல்லாமல் நேரடியாக காரில் ஈரோடு நோக்கி புறப்பட்டு சென்று விட்டார். விஜய் ஓட்டலுக்கு வருவார் என ரசிகர்கள் சிலர் ஓட்டல் முன் வெகு நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். மேலும் விஜய் விமான நிலையத்தில் இருந்து காரில் சென்ற போது ரசிகர்கள் சிலர் அவரை பைக் மற்றும் காரில் பின் தொடர்ந்தனர். வழக்கம் போல் அவரது காருடன் போட்டி போட்டு செல்ல முயன்றனர். ‘என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்கறாங்க, எப்படி தான் கண்டு பிடிச்சு பாலோ பண்றாங்களோன்னு தெரியல’ என போலீசார் புலம்பிய படி பின் தொடர்ந்த ரசிகர்களை மடக்கி நிறுத்தி வைத்தனர் போலீசாரின் கண்காணிப்பு, பாதுகாப்பு காரணமாக கோவை வந்த விஜய், ஈரோட்டிற்கு பத்திரமாக சென்றார்.
