கோவை வனத்தில் 50 எக்டரில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்..!

காந்திநகர் பத்ரகாளி அம்மன் கோயில் வனப் பகுதியில் அகற்றப்படும் மரங்கள்..!

கோவை மதுக்கரை வன சரக எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் , ஷூட்டிங் ரேஞ்ச், சந்தோஷி மாதா கோயில் வீதி, மிலிட்டரி கேம்ப், மைல்கல் உள்ளிட்ட பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவு அடர்ந்து வளர்ந்துள்ளது.

இவற்றில் 50 எக்டரில் களை தாவரங்களான உண்ணி செடிகள் லேண்டனா வகை தாவரங்கள் சீமை கருவேல மரங்கள் அகற்றுப்பணி வனத்துறை மூலமாக இன்று துவங்கியது . இரண்டு ஜேசிபி மூலமாக அனைத்து மரங்களும் வேருடன் அகற்றப்பட்டு வருகிறது.

சீமை கருவேல மரங்கள் அகற்றம் பணி நடக்கும் வனப்பகுதியில் யானை, சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அடிக்கடி யானைகள் இந்த வனத்தில் இருந்து பாலக்காடு மெயின் ரோடு வழியாக குரும்பபாளையம், மைல்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதாக தெரியவந்துள்ளது .தற்போது மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் யானைகள் நடமாட்டம் வெளிப்படையாகவே அதிகமாகிவிடும் .

எனவே கருவேல மரங்கள் அகற்றும் பணி நடக்கும் பகுதிகளில் எக்கு கம்பி வேலி அமைக்க வேண்டும் . ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் அகழி அமைக்கப்பட்டிருந்தது . ஆனால் இந்த அகழியை முறையாக பராமரிக்கவில்லை . அதுவும் சில பகுதிகளில் மண்மூடி காணப்படுகிறது ‌‌ . எனவே இதை முறையாக சீரமைத்து இருந்தால் யானைகள் நடமாட்டம் தடுக்கப்பட்டிருக்கும்.

இது தொடர்பாக மதுக்கரை வனசரக அலுவலர் அருண்குமார் கூறுகையில்,” டெண்டர் விட்டு முறைப்படி முள் மரங்கள் மற்றும் களை தாவரங்கள் அகற்றும் பணி நடக்கிறது. சில நாட்களில் இந்த பணி நிறைவடைந்து விடும். இந்த மரங்கள் அனைத்தும் ஒப்பந்த நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்படும். இதற்கு எவ்வளவு செலவானது என கணக்கு பார்த்து அதற்கு உண்டான தொகை வனத்துறை வசம் ஒப்பந்த நிறுவனம் வழங்கும்.

மரங்களை வேருடன் அகற்றி விட்டு அங்கே பசுமையான மரக்கன்றுகளை நடவு செய்யப் போகிறோம். குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலங்களான ஜூன் ஜூலை மாதங்களில் விதை பந்துகளை அதிகளவு தூவ இருக்கிறோம் . இதன் மூலமாக காய்ந்து போன முள் மரங்கள் உள்ள வனப்பகுதி இனி வரும் காலத்தில் பசுமையாக காட்சி தரும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *