கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ வைப்பதை கண்காணிப்பு கேமரா..

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. நகரில் மாநகராட்சியின் 100 வார்டில் இருந்து தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் இங்கே குவிக்கப்பட்டு வருகிறது. குப்பைத்தொட்டியில் சிலர் ஓட்டல் கடைகளின் சாம்பல் கழிவுகளை கொட்டுவதாக தெரிகிறது.

இந்த சாம்பலில் உள்ள எரியும் கரி துண்டுகளும் குப்பைகளுடன் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வந்து குவிக்கிறார்கள். முறையாக தரம் பிரிக்காமல் லோடு கணக்கில் குவியும் குப்பைகளில் எளிதாக தீப்பிடித்து விடுகிறது. புதிதாக கொட்டப்படும் குப்பைகளில் மீத்தேன் வாயு உற்பத்தியாக அது தானாகவே தீப்பிடித்து எரிவதாகவும் தெரிகிறது.

எதனால் எப்படி தீப்பிடிக்கிறது என உறுதி செய்ய முடியாமல் குப்பைக்கிடங்கில் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடுவது வாடிக்கையாகி போய்விட்டது. குப்பைக்கிடங்கு வளாகம் 630 ஏக்கரில் அமைந்துள்ளது.

இதில் சுமார் 450 ஏக்கரில் 25 லட்சம் டன் குப்பைகள் குவிந்துள்ளது. இதில் குப்பைகளில் பரவும் தீயை உடனடியாக அணைப்பது சாத்தியமில்லாத நிலையிருக்கிறது. தண்ணீர் மற்றும் பல டன் மண் கொட்டி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது சவாலாக இருக்கிறது. பல இடங்களில் மக்கள் மூச்சுத்திணறலுடன் போராடி வருகின்றனர்.

குப்பைக்கிடங்கு விவகாரத்தில் தீயை தவிர்க்க துர்நாற்றம் தீர்க்க இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. பல ஆண்டாக கண் எரிச்சல், மூச்சு திணறல், துர்நாற்றத்துடன் போராடுகிறோம் என வெள்ளலூர் பகுதி மக்கள் புலம்புகிறார்கள். குப்பை கிடங்கு வளாகத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெயில் தாக்கம் அதிகமாகி வருவதால் குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் வந்து செல்கிறார்களா என கேமரா மூலமாக கண்காணிக்கப்படுகிறது. லாரிகளையும் குப்பை கிடங்கு வளாகத்தில் கண்காணித்து வருகிறார்கள். தீ பற்றினால் உடனடியாக தீயை அணைக்க மாநகராட்சி, தீயணைப்பு குழுவினர் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *