சிறுவாணி அணை சீரமைக்க நிதி தாமதம்
கோவை சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மவையில் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளது. அணையில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தும் உரிமை தமிழகத்திற்கும், பராமரிக்கும் பொறுப்பு கேரள அரசுக்கும் உள்ளது
. அணையிலிருந்து தினமும் 10.1 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால், குடிநீர் எடுப்பது வெகுவாக குறைந்து விட்டது. அணையின் நீர் மட்டம் வறட்சி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அணையின் பக்க சுவரை பலமாக்குதல், பராமரிப்பு போன்ற பணி செய்ய கிட்டமிடப்பட்டது. இதற்கு கேரள நீர் பாசனத்துறை நிர்வாகம் 10 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகை கேட்டிருக்கிறது. குறிப்பாக அணையின் பக்க சுவர் பலமிழந்து நீர் கசிவு ஏற்படுகிறது.
நீரை முழுமையாக தேக்க முடியாத நிலை இருக்கிறது. மொத்த நீர் மட்ட உயரத்தில் 44.61 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க கேரள அரசு அனுமதிக்கிறது. மழை காலங்களில் அதிக நீர் இருந்தால் எந்த வித அனுமதியும் பெறாமல் அதிக நீரை திறந்து விடுவது வாடிக்கையாக நடக்கிறது.
இந்த நிலையில் அணை பராமரிப்பு, பலமாக்கும் திட்டம் கடந்த சில ஆண்டாக இழுபறி நிலையில் இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விரைவில் அணை பட்ஜெட் கூட்டம் நடத்தி திட்ட தொகை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால் கோவை குடிநீர் வடிகால் வாரியம், கேரள நீர் பாசனத்துறை இடையே ஆலோசனை கூட்டம் நடத்த இதுவரை திட்டமிடல் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் தேதிக்கு முன்பே பட்ஜெட் தொகை வழங்க வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி நடத்த வேண்டியிருப்பதால் விரைவில் இரு மாநில அதிகாரிகள் கூட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
