சொத்து வாங்கிட்டு சோறு போடலையே..


தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலெக்டரிடம் வழங்கப்பட்ட மனுவில்,” மணிகண்டன் என்பவர் இருகூர் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார் . இவர் மீது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தொழில் ரீதியாக பொறாமை கொண்டு மாவட்ட நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தார் .
இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு எந்த விதிமுறை மீறலும் இல்லை என தெரிவிக்கப்பட்டது .இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் தொழில் கூடத்துக்கு சீல் வைப்பதாக கூறி தொழிலாளர்கள் வெளியே அனுப்ப முயற்சி செய்தது . தனிப்பட்ட நபரின் புகாரின் பேரில் தொழில் குறுந்தொழில் நிறுவனத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையால் தொழில் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படுகிறது . எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டது
தமிழக வெற்றி கழகம் சார்பில் கலெக்டரிடம் வழங்கப்பட்ட மனுவில்,” ஒண்டிப்புதூர் சுங்கம் வழியாக இருகூர் செல்லும் பிரதான ரோட்டில் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. பல இடங்கள் மேடு பள்ளமாக இருப்பதால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை . பொதுமக்கள் மாணவ மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் . எனவே இந்த பகுதியை ரோட்டை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி ( 70 )என்பவர் அளித்த புகார் மனுவில் ,” எனக்கு மூன்று மகன்கள் உள்ளனர். எனது இரண்டாவது மகனுக்கு எனது 3.5 சென்ட் இடத்தை திரையம் செய்து கொடுத்தேன். இந்த நிலையில் என் மகன் என்னை கவனிப்பதாக கூறி இடத்தை வாங்கிய பின்பு என்னை கவனிப்பதில்லை. என் கணவர் 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் நான் கஷ்டப்படுகிறேன் . எனது சொத்தை அபகரித்து என் மகன் எனக்கு சாப்பாடு கூட தராமல் துன்புறுத்துகிறார் .எனது இடத்தை எனக்கு மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
