ஜனாதிபதி தேநீர் விருந்துக்கு கோவை பெண் ஆட்டோ டிரைவருக்கு அழைப்பு..!
கோவை கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி சங்கீதா (40). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் கட்டட தொழிலாளி .
சங்கீதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்
சங்கீதாவிற்கு சுயமாக தொழில் செய்ய வேண்டும் என ஆசை இருந்தது. தனக்கு பிடித்தமான ஆட்டோவை வாங்கி ஓட்டலாம் என நினைத்து 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ வாங்கினார்.
கோவை நகரில் இவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவர் தனது இடத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மானிய உதவியுடன் 500 சதுர அடியில் வீடு கட்டினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மத்திய அரசின் பார்வைக்கு கோவையில் மத்திய அரசின் மானியத்தில் கட்டப்பட்ட வீடுகளின் போட்டோ அனுப்பி வைக்கப்பட்டது .
இதில் சங்கீதாவின் வீடு சிறந்த வீடாக தேர்வு செய்யப்பட்டது . இதைத் தொடர்ந்து சங்கீதாவுக்கு வரும் 26 ம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பு மற்றும் குடியரசுத் தலைவருடன் தேனீர் விருந்து நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து சங்கீதா குடியரசு தின விழாவில் பங்கேற்க உரிய அழைப்பு சான்றுடனும் செல்ல இருக்கிறார் .
இவரை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று அழைத்து மாவட்ட கலெக்டர் பவன் குமார் கௌரவித்தார்.
சங்கீதா கூறுகையில்,”
எனக்கு இப்படி ஒரு அழைப்பு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை . குடியரசுத் தலைவருடன் என்ன பேச போகிறேன் என எனக்கு உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் என்னை போல் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். நான் ஆட்டோ ஓட்டும்போது மது போதையில் சில ஆண்கள் பயணிக்கும் போது என்னிடம் தொந்தரவாக நடந்து கொண்டார்கள். எனக்கு ஆட்டோவை போல் கார் வாங்கி ஓட்ட வேண்டும் என ஆசை இருக்கிறது . இதற்கு அரசின் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
