தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய்..!

கோவையில் வலம் வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனம்…

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கம், பரவல் கட்டுப்படுத்தப்பட ப்படவில்லை. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ளவர்களின் விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு வருவதாக எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் எச்.ஐ.வி தொற்று சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், ஊசி மூலமாக போதை மருந்து செலுத்தும் பழக்கமுள்ளவர்கள் பல்வேறு வகையான புலம் பெயர்ந்த தொழில் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு பரி சோதனை செய்யப்படுகிறது.

இந்த பரிசோதனையில் கிடைத்த முடிவின் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மாநில அளவில் சுமார் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. மாநில அளவில் 2,618 ஆற்றுப்படுத்துதல் மையங்களில் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை, மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.

அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் ஏ.ஆர்.டி என்ற கூட்டு மருந்து சிகிச்சை குறிப்பாக ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் (சிடி4 ) எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டாக எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் சிகிச்சை பெறுவது கணிசமாக குறைந்து விட்டது.

எய்ட்ஸ் நோயாளிகளின் இறப்பு மருத்துவ ரீதியாக பதிவு செய்யப்படுவதில்லை. இதனால் நோயின் தாக்கம் நோயாளிகளின் நிலை குறித்த விவரங்கள் தெரியாத நிலையிருக்கிறது. எய்ட்ஸ் பரவல் சதவீதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நோய் தடுப்பு, பாதுகாப்பு திட்டங்களில் படித்தவர்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை.

போதை ஊசி பழக்கம் இருப்பவர்களால் இந்த நோய் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. எய்ட்ஸ் நோயால் யாராவது இறந்து விட்டால் அந்த இறப்பு தனித்துவமாக அடையாளப்படுத்தப்படுவதில்லை.

பெரும்பாலானவர்கள் காசநோய், சுவாச நோய் பாதிப்பு காரணமாக இறந்து விட்டதாக சுகாதார துறையினர் தகவல் வெளியிட்டு வருகின்றனர். எய்ட்ஸ் நோய் பாதித்தவர் இறந்து விட்டாரா. வேறு முகவரிக்கு மாறி சென்று விட்டாரா என தெரியாத நிலையிருக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகள் இறப்பு இயற்கையான மரணமாக கருதப்படுகிறது.

எய்ட்ஸ் நோய் பாதிப்பில் இறந்து விட்டார் என வெளியில் சொல்லாமல் மறைப்பது பரவலாக நடக்கிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு இதர நோய்களுக்கு சிகிச்சைக்கு சென்றால் உரிய சிகிச்சை தரப்படுவதில்லை. வழக்கமான நோயாளிகளை போல் எய்ட்ஸ் நோயாளிகளை மருத்துவமனைகளில் கவனிக்காமல் ஒதுக்கும் நிலையிருக்கிறது.

மருத்துவமனைகள் புறக்கணிப்பதால் முறையான சிகிச்சை பெறாமல் நோயாளிகள் இறந்து விடும் நிலையிருப்பதாக புகார் அதிகரித்துள்ளது. எய்ட்ஸ் பாதிப்பில் உள்ளவர்களை வாழ்நாள் நீடிப்பிற்கான சிகிச்சைகள் வழங்க மறுக்கப்படுகிறது.

மாநில அளவில் அரசு மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோய் தடுக்கும் வகையிலான கையுறை, உடல் கவசம் கொண்ட எய்ட்ஸ் கிட் வைத்திருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பிரேத பரிசோதனை கூடங்களில் இந்த கிட் வைத்திருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எய்ட்ஸ் கிட் இல்லாமல் முக்கிய சிகிச்சை பிரிவுகள் செயல்படுகிறது. ரத்த பரிசோதனையில் நோயாளிக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால் அவரை தொடுவதற்கு, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனை செய்ய மருத்துவ துறையினர் தயக்கம் காட்டும் நிலை நீடிக்கிறது.

எய்ட்ஸ் நோய் பாதிப்பில் உள்ள பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் சிலருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி கற்று தருவதிலும் சம்பந்தப்பட்ட துறையினர் போதுமான கவனம் செலுத்தவில்லை. எய்ட்ஸ் நோயாளிகளின் குடும்பத்தினர் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்க்கை நடத்துகின்றனர்.

கவனிப்பு. ஆதரவில்லாத நிலையில் தொழில் நிறுவனங்களில் பணியாற்ற முடியாமலும் சுய தொழில் செய்ய போதுமான உதவி கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர்.

தமிழக சிறைகளில் எய்ட்ஸ் பாதிப்பில் கைதிகள் இறப்பது அதிகரித்து வருகிறது. இதை கண்டறிய அனைத்து சிறைகளிலும், பெண்கள் மறுவாழ்வு மையங்களில் (சுவாதார், உஜவாலா இல்லம்) எய்ட்ஸ் சோதனை அடிக்கடி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களுடன், குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது.

இவர்கள் பாதுகாப்பில்லாத உறவால் நோய் பாதிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநில அளவில் நடப்பாண்டில் 10க்கும் மேற்பட்ட கைதிகள் இறந்து விட்டனர். மாநில அளவில் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அவசியம் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *