தமிழக வனத்தில் 13 ஆண்டில் 41195 தீ விபத்து..! WWF India அதிர்ச்சி தகவல்
கோவை சாய்பாபா காலனி பகுதியில் WWF India என்ற இயற்கைக்காக உலகளாவிய நிதியம் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் உதவி என்ற காட்டுத்தீ மேலாண்மை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது.
கோவை வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்டத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறைகள், வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விளக்கினார்.
WWF India அமைப்பின் வன பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப இயக்குநர் ஆரீந்தரன் பேசியதாவது
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. அதில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான 3 மாத காலத்தில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2012 முதல் 2025 வரையிலான 13 ஆண்டு காலத்தில் 41,195 இடங்களில் காட்டுத்தீ தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் மட்டும் 33,672 காட்டுத்தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2,280 காட்டுத்தீ விபத்துகள் நடந்துள்ளன. இந்த தீ விபத்துகளில் பெரும்பாலான சம்பவங்கள் அண்டை மாநிலங்களை ஒட்டிய எல்லையோர பகுதிகளில் நடந்துள்ளன.
சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய இடங்களில் தான் அதிக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளன. 2020 மற்றும் 2021 ம் ஆண்டில் கொரோனா காரணமாக வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் குறைவாக இருந்ததால், காட்டுத்தீ விபத்துகள் குறைந்து காணப்பட்டன. ஆனால் அடுத்த ஆண்டுகளில் மீண்டும் காட்டுத்தீ விபத்துகள் அதிகரித்து விட்டன.
திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் காட்டுத்தீ அதிகம் ஏற்படும் பகுதிகளாக உள்ளன.
கோவை வனக்கோட்டத்தை பொறுத்தவரை கடந்த 13 ஆண்டுகளில் 310 காட்டுத்தீ விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த 2025ம் ஆண்டில் 7 காட்டுத்தீ விபத்துகளும், 2024 ம் ஆண்டில் 9 காட்டுத்தீ விபத்துகளும் நடந்துள்ளன. 99 சதவீத காட்டுத் தீ விபத்துகள் மனித தவறுகளால் தான் நடைபெறுகின்றன.
காட்டுத்தீ ஏற்பட்ட இடங்களை கண்டறிய இந்திய வன ஆய்வு மையம் செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் அளித்து வருகிறது.
இதேபோல் டபிள்யூ டபிள்யூ எஃப்
இந்தியா சார்பில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொபைல் செயலி மூலம் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்கள், அவை பரவ வாய்ப்புள்ள பகுதிகள் உள்ளிட்ட விபரங்களை சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தகவல் பெற ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
இதனால் காலதாமதம் தவிர்க்கப்பட்டு விரைவாக வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியும்.
உடனடி நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இழப்புகளை குறைக்க முடியும்.
இந்த விழாவில் உதவி வனப்பாதுகாவலர்கள் மாதவ், விஜயகுமார், wwf India பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
