துப்பாக்கியால் சுடப்பட்ட 3 கொள்ளையர்களுக்கு குண்டாஸ்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி3 பிளாக்கில் 10 வீடுகளிலும் கடந்த மாதம் நகை பணம் திருடப்பட்டது. இந்த வீடுகளில் திருட்டு நடந்த விவரம் அந்தந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டனர். இது தொடர்பான தகவல் அறிந்து கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் மட்டும் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதும் மற்ற வீடுகளையும் சேர்த்து மொத்தம் 56 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் பணம், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டதும், கொள்ளையர்கள் ஆட்டோவில் வந்து திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் பேக்குடன் செல்வது பதிவாகி இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் அந்த நபர்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது அவர்கள் தான் கொள்ளையர்கள் என்பதும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்தும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அந்த கொள்ளையர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த போலீசார் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது கொள்ளையர்கள் கோவைப்புதூரை அடுத்த குளத்துப்பாளையம், திருநகர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கே சென்றனர். அங்கு ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸ்காரர் பார்த்திபன் என்பவரை வெட்டினார்.

இதில் பார்த்திபனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். கொள்ளையர்கள் ஆயுதத்துடன் இருந்ததால் 4 பேரையும் போலீசார் வலது காலில் சுட்டுபிடித்தனர். காயம் அடைந்த கொள்ளையர்களை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 4 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் உத்தரபிரதேசம் காசியாபாத் பகுதியை சேர்ந்த இர்பான் (48), பர்மான் (22), கல்லூ ஆரிப் (60), ஆசிப் (45) என தெரியவந்தது. இதில் காலில் சுட்டதில் அதிக ரத்த இழப்பினால் ஆசிப் இறந்து விட்டார். மற்ற 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேற்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *