தேர்தல் வரப்போகுது… கல்யாண மண்டபம் புக்கிங் குறையுது

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் இரண்டாம் வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அன்றைய தினத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

அப்போதில் இருந்து தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் . குறிப்பாக 50 ஆயிரம் ரூபாய் குறைவாக மட்டுமே பணம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் ஆதாரம் காட்ட வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால்
தொழில் வணிகம் வியாபாரம் தொடர்பான செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது‌. இதை கருத்தில் கொண்டு தற்போதே தொழில் முதலீடுகளில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.

பிசினஸ் ஆர்டர்கள் முதலீடுகள் புதிய கொள்முதல்கள் போன்றவை தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக
தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே கொள்முதல் செய்து வருகின்றனர். நகை மற்றும் அலங்கார பொருட்கள் பாத்திரங்கள் ஆடைகள் போன்றவை பரிசு பொருட்கள் என தேர்தல் கமிஷன் கருதுவதால் அவற்றை அதிகமாக வாங்கி முன்கூட்டியே இருப்பு வைக்க அந்த தொழில் செய்பவர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வங்கி நடவடிக்கைகளும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் புதிய விதிமுறைகள் கட்டுப்பாட்டு வரையறைக்குள்கொண்டு வரப்படும். அதிக தொகை முதலீடு செய்யப்படும் வங்கி கணக்குகள் தேர்தல் கமிஷன் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே தேர்தல் பிரிவின் சந்தேக எல்லைக்குள் மாட்டாமல் இருக்க வணிக வர்த்தக தொழில் நிறுவனத்தினர் ஏப்ரல் வரை காத்திருக்காமல் வரவு செலவு கணக்குகளை விரைவாக முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருமணம் உள்ளிட்ட முக்கிய விசேஷங்கள் நடக்கும்போது அதிக தொகை கொண்டு செல்வதை கண்காணித்து தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்து விசாரிப்பது வாடிக்கையாக நடக்கிறது . இதை தவிர்க்கும் வகையில் சிலர் மார்ச் ஏப்ரல் மாதங்களில் முக்கிய விசேஷங்களை நடத்தாமல் தவிர்த்து வருவதாக தெரிகிறது.

ஏப்ரல் மே மாதங்களில் திருமண மண்டபம் மற்றும் பார்ட்டி ஹால் புக்கிங் சற்று மந்தமாக இருப்பதாக தெரிகிறது. மேலும் திருமணம் மற்றும் விசேஷங்கள் தொடர்பான தொழில்களும் தேர்தல் முடியும் வரை டல்லாக தான் இருக்கும். போலீசார் தேர்தல் பிரிவினர் திருமண மண்டபம் மற்றும் முக்கிய விசேஷங்கள் நடத்தும் இடங்களை கண்காணிப்பதால் நெருக்கடியான சூழல் இருக்கும்.

நிம்மதியாக விசேஷம் செய்ய முடியாது என கருதி பொதுமக்கள் பலர் தேர்தல் காலத்தில்
சுப காரியங்களை ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

தேர்தல் காலத்தில் தொழில்கள் மட்டுமல்ல அனைத்து விதமான வியாபாரங்களும் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. கடந்த தேர்தலைப் போல் இப்போதும் தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி செயல்படுவோம் என தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *