‘நக்சா சர்வே’ எப்படி பண்றது.. 3 நாளுக்கு பயிற்சி

கோவை மாவட்டத்தில் கணபதி பகுதியில் நில அளவைத்துறை சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா என்ற புவியியல் தகவல் அடிப்படையில் நிலம் அளவீடும் செய்யும் பணி கடந்த பிப்ரவரி 18ம் தேதி துவங்கியது. கணபதி பகுதியில் உள்ள 7 வார்டுகளில் (மாநகராட்சி வார்டு எண் 19,20,29,30,31,47,48) 10:44 சதுர கி.மீ பரப்பளவிற்கு முன்னோடி திட்டமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
டிரோன் மூலமாக நில அளவை செய்து, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புலவரைபடங்களை உருவாக்கி, அவற்றை உள்ளாட்சி சொத்து வரிக்கான தரவுகளுடன் இணைக்க திட்டமிட்டு பணி நடத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பணியாற்றும் நிலஅளவைத்துறை அலுவலர்களுக்கு சர்வே ஆப் இந்தியா மற்றும் மத்தியப்பிரேதச மாநில மின்னணுவில் துறை வல்லுநர்களால் 3 நாட்கள் பயிற்சி இன்று துவக்கப்பட்டது.
கோவையில் குமரகுரு கல்லூரியில் நடந்த இந்த பயிற்சியில் கோவை மண்டல நில அளவைப் பதிவேடுகள் துறை துணை இயக்குநர் மோகன், கோவை மாவட்ட உதவி இயக்குநர் சரவணன், சர்வே ஆப் இந்தியா நில அளவர் அத்ரேயா, மின்னணுவியல் நிபுணர் ராம் கிருஷ்ணா திவாரி, மத்திய நிலஅளவை அலுவலக தொழில்நுட்ப மேலாளர் ஜெயந்தி, காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர் .
இதில் 85 பேருக்கு களப்பயிற்சி மற்றும் தொழில் நுட்ப பயிற்சி தரப்பட்டது. இதில் உதவி இயக்குநர் சரவணன், நிலம் அளவீடு செய்யும் முறை, டிரோன் பயன்படுத்துவது, மேப்பிங் செய்வது களத்தில் பணியாற்றும் தன்மை குறித்து விளக்கம் அளித்தார். பயிற்சிக்கு பின்னர் தொழில் நுட்ப குழுவினர் முழு அளவில் நக்சா பணியில் ஈடுபடவுள்ளனர் . அதற்கு பின்னர் நக்சா பணிகள் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
