பாரதியார் பல்கலைக்கழகத்தில் 99.15 லட்ச ரூபாயில் டிஆர்டிஒ ஆராய்ச்சி திட்டம்
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு DRDO மூலம் ரூ.99.15 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆராய்ச்சி திட்டம் அங்கீகாரம்
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் (DRDO), நியூ டெல்லி நிறுவனத்தால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய ஆராய்ச்சி திட்டம் ஒன்றிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
“Development of Novel Antidote(s) for Highly Toxic Organophosphorous Compounds” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆராய்ச்சி திட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தின் DRDO Industry Academia – Centre of Excellence (DIA–CoE) மையத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்திற்கு மொத்தமாக ரூ.99.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கால அவகாசம் 36 மாதங்கள் ஆகும். இந்த ஆராய்ச்சி திட்டத்தின் முதன்மை ஆய்வாளராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் துறைத் தலைவருமான ஜெயகுமார் செயல்படுகிறார்.
இந்த ஆராய்ச்சி திட்டம் மிகவும் ஆபத்தான மற்றும் அதிக நச்சுத்தன்மை கொண்ட Organophosphorous compounds எனப்படும் வேதிப்பொருட்களின் தாக்கத்திலிருந்து மனித உடலை பாதுகாக்கக்கூடிய புதிய வகை Antidote மருந்துகளை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
உலகளவில் நச்சு வேதிப்பொருட்கள் தொடர்பான பாதுகாப்பு ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இத்தகைய புதிய எதிர்வினை மருந்துகளை உருவாக்குவது தேசிய பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கும் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நவீன உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நச்சுப் பொருட்களின் தாக்கத்தை தடுக்கும் திறன் கொண்ட புதிய மருந்து மூலக்கூறுகளை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆய்வுகள் எதிர்காலத்தில் மருத்துவத் துறைக்கும் பாதுகாப்புத் துறைக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் தரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இந்த முக்கியமான தேசிய அளவிலான ஆராய்ச்சி திட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்திருப்பது பெருமைக்குரியது
