பிரியாணி , குவாட்டர் … விலை பட்டியல் விசாரிக்குது தேர்தல் கமிஷன்
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி வெளியாகும் வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவினர் எதிர்பார்த்துள்ளனர் இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உணவு பொருட்கள் தொடர்பான பட்டியலை சேகரித்து அனுப்ப தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பொருட்களின் விலையிலும் ஏற்ற தாழ்வு இருக்கிறது. எனவே மாவட்ட வாரியாக உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும், அதனை தேர்தல் கமிஷன் ஆய்வு அந்த விலை பட்டியலை தேர்தல் தேதி அறிவித்த உடன், உடனடியாக அமலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி டீ, வடை, போண்டா, பப்ஸ், காபி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, புரோட்டா, சாப்பாடு, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜ் பிரியாணி, சில்லி சிக்கன், பிஷ் பிரை, தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், குடிநீர் பாட்டில், குவார்ட்டர் பாட்டில் கூல் டிரிங்க்ஸ், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றின் விலை விவரங்கள் சேகரித்து பட்டியலில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படும் போது வேட்பாளர் மனு தாக்கல் செய்யாவிட்டாலும் கட்சி கூட்டங்களில் இந்த உணவு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கினால் அதை வீடியோ ஆதாரங்களுடன் பதிவு செய்து செலவு கணக்கு வரம்பிற்குள் கொண்டு வர தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. மனு தாக்கல் செய்ததும், அந்த வேட்பாளரின் செலவு விவர பட்டியல் தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரிவினர் கூறுகையில், “தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நடத்தை விதிகள் அமலாக்கப்படும் முன்பே விரைவாக எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்து முடிக்க வேண்டியுள்ளது. ஓட்டல் நிர்வாகத்தினரிடம் விவரங்கள் பெறப்பட்டு பொதுவான விலை விகிதப்படி பட்டியல் தயாரிக்கப்படும். நாங்கள் அனுப்பும் பட்டியலை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து விலை பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கும். இந்த விலை விவரங்களின் படி நாங்கள், தேர்தல் செலவில் வேட்பாளர்கள், கட்சியினர் தங்களது தொண்டர்களுக்கு இந்த பொருட்களை வழங்கினால் நாங்கள் கணக்கு போட்டு விவரங்கள் கேட்போம். அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும் என்பதால் குடிநீர் வாங்கி தந்தாலும் அதை நாங்கள் செலவு கணக்கு பட்டியலில் கொண்டு வந்து விடும் உணவுக்கு டோக்கன் தந்தாலும் அந்த டோக்கன் விவரங்கள் பதிவு செய்து அதற்கான செலவு விவரங்கள் பெறப்படும், “என்றனர்.
