போதைப் பொருள் கடத்திய 4 பேருக்கு 12 ஆண்டு சிறை; கோவை கோர்ட் தீர்ப்பு..!
பிரதான குற்றவாளி முனீர்..
நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீசார் கடந்த 26-10-2023ம் தேதி கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
காருக்குள் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் பெயர் முகவரி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனையடுத்து போலீசார் கார் மற்றும் 4 பேரையும் சோதனை செய்தனர். அதில், மலப்புரத்தை சேர்ந்த முனீர் (34) என்பவரிடம் எம்எம்டிஏ என்ற போதைப்பொருள் 120 கிராம் இருந்தது. விசாரணையில், அவர் பெங்களூரில் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்து மற்ற மூவருடன் சேர்ந்து விற்பனைக்காக போதைபொருளை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மசினகுடி போலீசார் முனீர், மலப்புரத்தை சேர்ந்த பாசில் ஜமான் (26), சியாத் (22), ஷக்பாஸ் (26) ஆகிய 4 பேரை போதைபொருள் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இறுதி விசாரணையில், 4 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் தலா 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ராஜலிங்கம் இன்று உத்தரவிட்டார், அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார்.
