மனைவியை கொலை செய்து ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’ வைத்த கணவர் கைது..
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீபிரியா திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வேலை தேடி கோவை வந்தார். கோவையில் தனியார் நிறுவனத்தில் இவர் ஊழியராக வேலை செய்து வந்தார். காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
கள்ளக்காதலரிடம் அவர் தொடர்ந்து பேசி வந்துள்ளார். சமீபத்தில் கள்ளக்காதலர் ஸ்ரீபிரியா உடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை பாலமுருகனுக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த பாலமுருகன் தனது மனைவியை கண்டிக்க திருநெல்வேலியில் இருந்து கோவைக்கு வந்தார். தங்கும் விடுதிக்கு சென்ற பாலமுருகன் மனைவியிடம் நான் பலமுறை எச்சரித்தும் நீ கேட்கவில்லை. கள்ளத்தொடர்பை இனியும் தொடர்ந்தால் விபரீதம் ஏற்படும் என எச்சரித்தார்.
ஆனால் இதைக் கேட்காமல் ஸ்ரீபிரியா அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதில் கடும் கோபமடைந்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாலால் ஸ்ரீ பிரியாவை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்துவிட்டார். இது தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மனைவியை கொலை செய்த பாலமுருகன் அவரது சடலத்தை முன் அமர்ந்து தனது செல்போனில் செல்பி போட்டோ எடுத்தார். அந்தப் படத்தை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இல் வைத்து பாவத்தின் சம்பளம் மரணம் என கமெண்ட் பதிவு செய்திருந்தார்.
கொலை செய்த பின் அவர் தப்பி ஓடாமல் போலீஸ் வரும் வரை சடலம் முன்பே பொறுமையாக காத்திருந்தார். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பாலமுருகன் மனைவியின் உறவினர் ஒருவரையும் அழைத்து வந்துள்ளதாக தெரிகிறது. அவர் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வருவார்
என உறவினர் என காத்திருந்த நிலையில் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்கிறது. கள்ளத்தொடர்பு விவகாரத்தால் மனைவியை கணவர் கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
