முருகனுக்கு அரோகரா..!கோவை கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்
தைப்பூச விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பிரபலமான முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில், அனுவாவி முருகன் கோயில், ஆவலப்பம்பட்டி வேலாயுதசாமி கோயில், ஒண்டிப்புதூர் – பாலமுருகன் கோயில், கண்ணம்பாளையம், கப்பளங்கரை, கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயில்,
காளப்பட்டி கற்குமலை ஆண்டவர் கோயில், குமரன் குன்று கல்யாண | சுப்ரமணியசுவாமி கோயில், குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில், சரவணம்பட்டி ரத்தினகிரி மருதாசல கடவுள் கோயில், செடிக்காபாளையம் தண்டாயுதபாணி கோயில், காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோயில், நடுப்பாளையம் சுப்ரமணியசாமி கோயில், பொன்மலை கோயில், கிணத்துக்கடவு முத்துமலை முருகன் கோயில் தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது.
பக்தர்கள் சிலர் வேல், காவடியுடன் வந்தும், பால் குடம் சுமந்தும், அலகு குத்தியும் கோயில்களில் நேர்த்தி கடன் நிறைவேற்றினர். பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் கோயில்களில் அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக மருதமலை, அனுவாவி, சென்னியாண்டவர் கோயில்களில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது, அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் ரோட்டில் பச்சை, மஞ்சள் ஆடைகளுடன் யாத்திரை சென்றனர். பாதுகாப்பிற்காக போலீசார் கோயில் வளாகங்களில் குவிக்கப்பட்டிருந்தனர்.
