கோவையில் மு க ஸ்டாலின் பிறந்தநாள்: சில்வர் ‘குண்டா’ பரிசு வழங்குவது தாமதம்..!
கோவை மாவட்டத்தில் அதிமுக மற்றும் திமுக பொதுமக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை தேர்தலை முன்னிட்டு வாரி வழங்கி வருகிறது.
அதிமுக தரப்பில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா என்ற பெயரில் சாப்பாடு தட்டு ஹாட் பாக்ஸ் வேட்டி சேலை போன்றவை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் ரேஷன் கார்டு அடிப்படையில் அனைத்து வீடுகளுக்கும் குறிப்பாக 11.50 லட்சம் வீடுகளுக்கு பரிசு பொருட்கள் வாரி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
திமுக தரப்பில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பொதுமக்களின் வீடுகளுக்கு சுமார் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட சில்வர் குண்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட அளவில் அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி இந்த பரிசு பாத்திரம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பரிசு பாத்திரம் வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக தெரிகிறது. கடந்த மூணாம் தேதி முதல்வரின் பிறந்தநாள். அன்றிலிருந்து இதுவரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு திமுக தரப்பில் பரிசு பாத்திரம் வழங்கப்படவில்லை.
தங்களது கட்சியினர் வேண்டப்பட்டவர்கள் என பார்த்து பார்த்து பாத்திரங்களை வழங்குவதாகவும் சிலர் பாத்திரங்களை வழங்காமல் பதுக்கி விட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்பாபா காலனி சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு பாத்திரம் வந்து சேரவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன் பாத்திரங்களை வழங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் பாத்திரங்களை தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்து விடுவார்கள். பல இடங்களில் குடோன்களில் பாத்திரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இவை பிடிபட்டால் சிக்கல் ஏற்படும். எனவே தடையின்றி பரிசு பாத்திரம் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொங்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட நிலையில் திமுக தரப்பில் பாத்திரங்கள் வழங்காமல் இருப்பதால் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவை ஏற்படுத்தியிருக்கிறது.
