மூலப் பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது: மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தகவல்
கோவை விமான நிலையத்தில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி நிருபர்களிடம் கூறியதாவது;
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் பங்களிப்பு 33.31 சதவீதமாக உள்ளதாகவும். நாட்டின் உற்பத்தித் துறையில் 36 சதவீத பங்கையும் மொத்த ஏற்றுமதியில் 46 சதவீத பங்கையும் இத்துறை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் வலிமை அதன் ஏற்றுமதி அளவை வைத்தே கணக்கிடப்படும் நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான முதுகெலும்பாக MSME-கள் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார் .
தொழில்துறையினர் சந்தித்து வரும் சவால்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் அலுமினியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என்றும், விரைவில் நிலைமை சீராகி பழைய விலை நிலவரம் திரும்பும் என்றும் தெரிவித்தார்.
ஜாப் ஓர்க் செய்யும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்திலிருந்து சதவீதமாகக் குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய போது அவர், இது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என உறுதியளித்தார்.
மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போல சிறு தொழிலாளர்களுக்கும் MSME கிரெடிட் கார்டு வழங்குவது குறித்த அறிவிப்பு, அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்றும் கூறினார்.
மூலப்பொருள் விலையைக் கண்காணிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், கோவையில் உள்ள கள நிலவரங்களை அதிகாரிகளுடன் ஆலோசித்து அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
கோயம்புத்தூரின் தயாரிப்புகள் சர்வதேசச் சந்தையில் வலுவாகச் சென்றடையத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் என்று குறிப்பிட்ட அவர் கயிறு வாரியம் போன்ற அமைப்புகள் மூலம் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தமிழ்நாடு, பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குறுந்தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார்
