யானை காரிடாரில் டிஜிபிஎஸ் சர்வே..!

கோவை மாவட்டத்தில் 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்திருக்கிறது. இதில் யானைகளின் இடப்பெயர்ச்சி அதிகமாக இருக்கிறது. கேரள மாநிலத்திலிருந்து கோவை வனத்திற்கு யானைகள் அதிகமாக வந்து செல்கின்றன.

வன எல்லையில் ஆனயிக தலங்கள் சுற்றுலா மையங்கள், கல்வி, பொழுது போக்கு நிறுவனங்கள் இருக்கிறது. அதிக கட்டடங்களின் யானைகளின் வலசை பாதை (காரிடார்) முடங்கி போய் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வே பிரிவின் மூலமாக யானை வழித்தடங்களை சர்வே செய்ய உத்தரவிடப்பட்டது.

இதற்காக நில அளவை பிரிவில் இருந்து 10 சர்வேயர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர் முதல் கட்டமாக யானை வழித்தட பாதைகளை ‘மேப்பிங்’ என்ற வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. இதற்கு பின் டிஜிபிஎஸ் என்ற புவியியல் தகவல் அடிப்படையிலான கருவி மூலமாக வழிதடங்கள் சர்வே செய்யப்படும். சுமார் 160 கி.மீ தூரத்திற்கு இந்த சர்வே நடக்கவுள்ளது.

மேட்டுப்பாளையம், பில்லூர், காரமடை, வெள்ளியங்காடு, பெரிநாயக்கன்பாளையம், பாலமலை, கோபநாரி, ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், தொண்டாமுத்தூர். நரசீபுரம், இருட்டுப்பள்ளம், சிறுவாணி, மங்கலம்பாளையம், தென்கரை, கோவைப்புதூர், மதுக்கரை, எட்டிமடை, புதுப்பதி, மாவுத்தம்பதி, வாளையார் வரை சர்வே நடக்கவுள்ளது.

இதில் வன எல்லை, வழிதடங்கள், ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட வன எல்லைகள், விவசாய நிலங்கள், வன எல்லைப்பகுதியில் உள்ள நீர் பாதைகள், காரிடார் என அடையாளம் காணப்பட்ட பகுதிகள் தனித்தனியாக சர்வே செய்து பட்டியலிடப்படவுள்ளது. இதன் மூலமாக வனத்திற்குள் நடந்துள்ள அனைத்து அத்துமீறல்கள் அபகரிப்புகளும் தெரிய வரும். பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் வனத்திற்குள் சென்று அந்த இடங்களை தங்களது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது .

இந்த இடங்களை மீட்கும் வகையில் இந்த நில அளவை பணிகள் இருக்கும். 5 முதல் 6 மாத காலம் வரை சர்வே நடத்தப்படும். இந்த விவரங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *