வறட்சியில் சிறுவாணி அணை
கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையின் நீர் தேக்க உயரம் 49.53 அடி இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 29.88 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.14 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி உண்டு. ஆனால் நீர் மட்டம் குறைவினால் அணையில் இருந்து 6.9 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுத்து சப்ளை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக குடிநீர் அளவு 25 முதல் 30 சதவீதம் குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. அணையில் உள்ள குடிநீர் வரும் ஜூன் மாதம் வரை சமாளிப்பாக வழங்க வேண்டியிருக்கிறது. இதே அளவிற்கு குடிநீர் எடுத்தால் ஏப்ரல் மாதம் வரை குடிநீர் வழங்க முடியும். வரும் காலங்களில் குடிநீர் அளவை மேலும் குறைத்தால் வரும் ஜூன் மாதம் வரை குடிநீர் வழங்க முடியும், குடிநீர் அளவு வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்த அளவை விட மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு இடையே கனமழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் நீர் எடுப்பு அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிறுவாணி குடிநீர் திட்டத்தில் சுமார் 7 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சப்ளை குறைவு காணமாக தினமும் பல ஆயிரம் பேருக்கு குறைந்த அளவு குடிநீர் கிடைப்பதாக தெரிகிறது.
அணை நீர் மட்டம் பாதாளத்தை எட்டும் போது சிறுவாணி குடிநீர் திட்டத்தில் பில்லூர் திட்டத்தை இணைத்து குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. வரும் சில நாட்களில் சிறுவாணி அணை குடிநீர் அளவு மேலும் குறையும். எனவே பில்லூர் திட்டத்தில் இருந்து கூடுதல் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவாணி அணையின் நீர் தேக்க பகுதியில் அணையை பலமாக்க தேவையான திட்ட பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளது. அதிகாரிகள் குழுவினர் இந்த பகுதியில் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். வரும் கோடை காலத்தில் இதற்கான திட்ட பணிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவாணி அணையின் நீர் தேக்க பகுதியில் பல்வேறு இடங்களில் மண் சரிவு காணப்படுகிறது. கடந்த பல ஆண்டாக இந்த அணை சீரமைக்கப்படவில்லை மேலும் அணையின் நீர் வரும் ஒடைகளிலும் கடந்த காலங்களை போல் அதிக நீர் வரத்து இருப்பதில்லை. அணை கடந்த 10 ஆண்டுகளில் முழு அளவில் நிரம்ப வில்லை. கன மழை பெய்து உச்சத்தை எட்டிய போதும் கேரள நீர் பாசனத்துறையினர் எவ்வித அறிவிப்பும் இன்றி நீரை திறந்து வெளியேற்றியுள்ளனர். தற்போது வெயில் அதிகரித்து வருவதால் குடிநீர் தேவையும் அதிகமாகி இருக்கிறது. தற்போது 70 சதவீத அளவிற்கு மட்டுமே குடிநீர் சப்ளை மற்றும் வினியோகம் நடக்கிறது. சிறுவாணி நீர் வினியோக பகுதியில் கூடுதல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
