விரைவில் தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு; கோவை தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் சிஇஓ அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை..!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்பாடுகளை முழு அளவில் செய்து முடித்திருக்க வேண்டும். ஊழியர்கள் பட்டியலை தயார் செய்து இறுதி செய்ய வேண்டும். பட்டியல் மிகச் சரியாக இருக்க வேண்டும். யாருக்கும் தேவையின்றி பணி சலுகை வழங்கக் கூடாது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறக்கும் படை குறிப்பாக வீடியோ கண்காணிப்பு படை, நிலையான கண்காணிப்பு படை போன்றவற்றை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
அனைத்து ஓட்டு சாவடிகளுக்கும் தேவையான வாக்காளர் பட்டியல் தயார் நிலையில் இருக்க வேண்டும். பட்டியலில் எந்த குழப்பமும் இருக்கக் கூடாது . பெயர் விடுபட்டு இருக்கக் கூடாது. ஓட்டு சாவடி மேப் மற்றும் ஆவணங்கள் சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் முறையான தகவல்களை தெரிவித்திருக்க வேண்டும். தேர்தல் தேதி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது .
அதற்கு ஏற்ப நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் . வரும் 12-ம் தேதி மற்றும் 13ம் தேதி சென்னையில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். இந்த கூட்டத்திற்குப் பிறகு மாநில அளவில் தேர்தல் தேதி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். தேர்தல் நடத்தும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.
இந்த அறிவிப்புகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு செயல்முறைக்கு கொண்டு வரப்படும். தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படும் வகையில் அரசுத் துறையினர் செயல்படக்கூடாது. திட்டப் பணி ஒதுக்கீடு மற்றும் பணிகள் செய்வதில் விதிமுறை மீறல்கள் இருக்ககூடாது
என தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
