‘வீட்டு சாப்பாடு போர்’..கோவையில் அதிகரிக்கும் ஓட்டல்கள்..!
கோட்டைமேடு புட் ஸ்டிரீட். ..
கோவை மாவட்டத்தில் பம்பு, கிரைண்டர், மோட்டார். ஆட்டோமொபைல், ஜவுளி உட்பட பல்வேறு வகையான தொழில்கள் அதிகமாக இருக்கிறது.
சமீப காலமாக ஹோட்டல் தொழில்கள் மாவட்ட அளவில் பரவலாக அதிகமாகி வருகிறது. குறிப்பாக இரவில் செயல்படும் ஹோட்டல்கள் அதிகமாகிவிட்டது இதற்காக பிரதான ரோடுகள் முக்கிய பகுதிகளில் ஹோட்டல் தொழிலுக்கு ஏற்ற கட்டுமானங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது ஓட்டல் தொழில் பல மடங்கு அதிகமாகி விட்டதாக இந்த தொழில் செய்வோர் கூறுகின்றனர். மேலும் குறைந்த முதலீட்டில் ஹோட்டல் தொழில் தொடங்கினால் கூட அதிக லாபம் கிடைக்கும். முதலீட்டுக்கு பாதிப்பு இல்லாத தொழிலாக ஓட்டல் தொழில் இருப்பதாக இந்த தொழில் செய்து – வருவோர் கூறுகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் வணிக, வர்த்தக நிறுவனங்கள் நடத்தி வந்தவர்கள் கூட அந்த நிறுவனங்களை ஹோட்டல் கடையாக மாற்றி வருகின்றனர். அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு ,சத்தி ரோடு என பல்வேறு பிரதான ரோடுகளில் வணிக வர்த்தக நிறுவனங்களை காட்டிலும் ஹோட்டல் கடைகளின் எண்ணிக்கையை மிகவும் அதிகமாகி விட்டது.
உணவு பொருட்கள் வாங்குவதிலும் புதிய வகையான உணவுகளை ரசித்து ருசிப்பதிலும் கோவை மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேற்கத்திய உணவுகளும் கோவை நகரில் பரவலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாட்டு உணவு நிறுவனங்களின் கிளைகளும் கோவையில் கணிசமாக துவக்கப்பட்டு வருகிறது
. வருங்காலங்களில் ஓட்டல் தொழில் மேலும் அதிகமாகும் .இதில் முதலீடு செய்வோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக அசைவ உணவு ஹோட்டல்கள் பெருகி வருவதாக உணவுத் தொழில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர் தங்கும் விடுதி, லாட்ஜ் ரிசார்ட் போன்றவற்றிலும் ஹோட்டல்கள் திறக்கப்பட்டு வருகிறது .
பல்வேறு கட்டங்களை ஹோட்டலுக்கு ஏற்ப வடிவமைத்து தரும் இன்டீரியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. பல்வேறு தொழில் நிறுவன ஷோரூம்கள் ஹோட்டல் கட்டமைப்புக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பேக்கரி கேக் ஷாப், சைனீஸ், பஞ்சாபி என பல்வேறு தரப்பிலான உணவு கூடங்களும் நகரின் பல பகுதிகளில் பரவலாகி வருகிறது. ஹோட்டல் கடைகளின் அதிகரிப்பினால் உணவு பாதுகாப்பு துறையினர் உணவு ஆய்வு பணிகளை தீவிர படுத்தியுள்ளனர்.பதப்படுத்தும் உணவு தயாரிப்பு கூடங்களும் மாவட்ட அளவில் அதிகமாகி விட்டது.
‘பேக்கிங் புட் உணவு கூடங்கள் இதர தொழிற்சாலைகளுக்கு இணையாக அதிகமாகி வருகிறது. ஆர்டரின் பேரில் தயாரிக்கும் உணவு கூடங்களும் உருவாகி விட்டது. மசாலா தயாரிப்பு நிறுவனங்கள், டிரை உணவு தயாரிப்புகள், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் உணவுகள், இறைச்சி, கடல் உணவுகள் விற்பனையும் மாவட்ட அளவில் ) அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. வீட்டு சமையல் என்கிற நிலைமை மாறி, ஆர்டர் உணவு என்ற என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.
உணவு பாதுகாப்பு துறையினர் கூறுகையில், “அனைத்து வகையான உணவு தயாரிப்பு கூடங்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் உரிமம் பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் கடைகள், உணவு பொருட்கள் தயாரித்து மொத்தமாக விற்பனை செய்யும் கூடங்கள் பேக்கிங் பொருட்கள் தயாரிப்பவர்கள் என பல்வேறு தரப்பு கூடங்கள் அதிகமாகி விட்டது, கடந்த 5 ஆண்டில், இதுபோன்ற உணவு கடைகளின் எண்ணிக்கை பல ஆயிரம் அதிகமாகி விட்டது.
உணவு கடைகளின் வளர்ச்சி எதிர்பார்ப்பை காட்டிலும் மிக அதிகமாக இருக்கிறது. இவ்வளவு கடைகளுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவதாக தெரிகிறது. புதிய வகை உணவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
யூ டியூப், இன்ஸ்ட் கிராம் போன்ற சமூக வலைகளங்களில் பல்வேறு உணவு கூடங்கள் தொடர்பாக மக்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. உணவு கடைகள் தொடர்பாக சமூக வலைதள தேடல்களும் அதிகமாகி வருகிறது. இதனால் தொழில் கூடங்களுக்கு இணையாக ஓட்டல் தொழில் வளர்ச்சி இருக்கிறது. விரைவில் தொழில் கூடங்களை காட்டிலும் உணவு கூடங்கள் அதிகரித்து விடும் தொழில் வேலை என குடும்பத்தினர் பிசியாக இருப்பதால் ஓட்டல் உணவுகளை நாட வேண்டிய நிலைமை இருப்பதாக தெரிகிறது. ” என்றனர்.
