வெள்ளிங்கிரி மலையில் பெண் பக்தர்கள் அதிகரிப்பு..!
கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை சீசன் துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் பல்லாயிரம் பேர் மலையேறி வெள்ளிங்கிரி சுவாமியை தரிசனம் செய்து வந்துள்ளனர். கூட்டம் அதிகம் ஆகி வரும் நிலையில் பக்தர்களை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பக்தர்களுக்கு மருத்துவ குழு மூலமாக ரத்த அழுத்தம் பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களை விட இந்த முறை பெண்கள் அதிகமாக மலையேறி சாமி தரிசனம் செய்கிறார்கள்.
வயதான பெண்கள் மட்டுமல்ல இளம் பெண்களும் சிறுமிகளும் ஆர்வத்துடன் மலை ஏறி வருகிறார்கள். பெண்கள் வருகை அதிகரித்த நிலையில் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏழு மலைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் தரக்கூடாது. பேப்பர் கவரில் போட்டு தர வேண்டும் என வனத்துறை உத்தரவிட்டுள்ளது . இதற்காக வனத்துறை சார்பில் மலைப்பகுதியில் வைக்கப்பட்ட கடைகளுக்கு பிளாஸ்டிக் டப்பா வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இந்த முறை பிளாஸ்டிக் இல்லாத மழையேற்ற சூழலை உருவாக்க வனத்துறை தீவிரம் முயற்சி எடுத்துள்ளது.
