வேளாண் பல்கலையில் சமத்துவ பொங்கல்..!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிர் மேலாண்மை இயக்குநர் கலாராணி இந்தப் பொங்கல் விழா விவசாயிகளையும், விஞ்ஞானிகளையும் இணைக்கின்ற இனிய விழாவாக மலர்ந்திருக்கிறது என்றார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பொறுப்பு), சுப்பிரமணியன் பேசுகையில், “மண் வளத்தை பெருக்க, விவசாயிகள் பசுந்தாழ் உரப் பயிர்களை கண்டிப்பாக வளர்க்க வேண்டும் சந்தை சார்ந்து விவசாயம் செய்ய, விவசாயிகள் குழு சார்ந்து இயங்க வேண்டும். இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க, விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியாவது இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவதற்கு சமத்துவப் பொங்கல் விழாவில் சபதமேற்கவேண்டும் ,”என்றார்.
வேளாண்புலத்தின் முதன்மையர். வெங்கடேச பழனிச்சாமி, பொங்கல் பண்டிகைக்கும், இயற்கைக்கும், விவசாயிகளுக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூறினார். முன்னதாக, மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முரளி அர்த்தநாரி விவசாயிகளை வரவேற்றுப் பேசினார். தொண்டாமுத்தூர் விவசாயி விஜயன் மற்றும் திருவாரூர் விவசாயி ஜெயக்குமார் ஆகியோர் இதுபோன்ற நிகழ்வுகள் எங்களுக்கும் பல்கலைக்கழகத்துக்குமான இணைப்பைப் பலப்படுத்துகின்றன என்றனர்.
இந்த விழாவினை நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். விரிவாக்கப் பேராசிரியர் இராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
