170 கோடி ரூவா வேணுமாம் சிங்காநல்லூர் மேம்பாலம் கட்ட..
கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.
இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
ஆனால் மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்கி டெண்டர் விட்டு பணியை துவக்க வில்லை மேம்பாலம் 2.4 கி மீ தூரத்திற்கு அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது நடப்பாண்டு துவக்கத்தில் நிதி ஒதுக்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பட்ஜெட் முடிந்தும் நிதி வரவில்லை.
கடந்த மே மாதத்திலிருந்து அரசு, நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது. 3 ஆண்டாக நிதி ஒதுக்காத நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தினால் திட்ட மதிப்பீடும் மாறி விட்டது. தற்போதைய சூழலில் திட்ட மதிப்பீடு 170 கோடி ரூபாய் என உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டுகள் ஆக ஆக திட்ட மதிப்பீடு தொடர்ந்து உயரும் நிலை இருக்கிறது. சிங்காநல்லூர் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்படுமா தொடர்ந்து நிலுவையிலேயே இருக்குமா என பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கவலையில் காத்திருக்கின்றனர்.
திருச்சி ரோட்டில் ராமநாதபுரம் வரை மேம்பாலம் இருக்கிறது. அதற்கு பின் 4 கி.மீ தூரம் கடந்து பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு பகுதியில் தான் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இங்கே மேம்பாலம் அமைந்தால் பைபாஸ் ரோடு வரை எந்த நெருக்கடியும் இல்லாமல் வாகனங்கள் சென்று வர முடியும்.
மேலும் இதே திருச்சி ரோட்டில் சிந்தாமணிப்புதூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் சார்பில் மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே எதிர்கால வளர்ச்சி, தற்போதைய போக்குவரத்து நெரிசல் சூழலை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்காநல்லூர் மேம்பால திட்டத்திற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தடையின்மை சான்று அவசியம் தேவைப்படுகிறது.
இங்கே மெட்ரோ ரயில் சேவை வர இருப்பதால் மேம்பால திட்டத்தில் பல்வேறு மாறுதல் தேவைப்படுகிறது. கோவையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் நிலுவையில் இருந்தாலும் ஒப்புதல் பெற்ற பின்னரே மேம்பால பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர். மேம்பால பணிக்காக ஒன்றிய அரசிடம் ஒப்புதல் மற்றும் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒரிரு மாதத்திற்குள் திட்ட பணிகளை துவக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும் என அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
