5 லட்சம் வாக்காளர்கள் காலி…. சீக்கிரம் ஒட்ட போறாங்க லிஸ்ட்
கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. இதில் மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் குறிப்பாக ஜனவரி மாத பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். எஸ்ஐஆர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் வழங்கி திரும்ப பெற்ற பின்னர், 5,02,256 பேர் காணவில்லை என தெரியவந்தது. இறந்தவர்கள் 1,13,592 பேர், கணக்கெடுப்பின் போது இல்லாதவர்கள் (ஆப்சென்ட்) 76,096 பேர், வீடு, முகவரி மாறி சென்றவர்கள் 2,91,928 பேர், இரு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் 20,245 பேர் நீக்கப்பட்டதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
அதாவது 27,22,942 பேர் மட்டுமே மாவட்ட அளவில் தகுதியான வாக்காளர்களாக இருக்கின்றனர். 15.57 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர் திரும்ப இடம் பெற வேண்டுமானால், அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இவர்கள் திரும்ப வாக்காளர்களாக சேர்க்க முடியும். வரும் 11ம் தேதி வரை படிவம் பெற அவகாசம் இருக்கிறது.
இறந்தவர்கள், ஆப்சென்ட், முகவரி மாறியவர்கள் தொடர்பான பட்டியல் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சேபணை, திருத்தம் இருந்தால் ஆதார பூர்வமாக தெரிவிக்கலாம். உரிய படிவம் வழங்கி, மீண்டும் வாக்காளர்களாக சேர்க்க முடியும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட அளவில், 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போயிருப்பதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த எஸ்ஐஆர் பட்டியலின் பின்னணி, வாக்காளர்கள் நீக்கம் குறித்து அரசியல் கட்சியினர் விசாரித்து வருகின்றனர். எதாவது ஏரியாவில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கருத்தில் வைத்து வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டார்களா என தகவல் சேகரித்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட அளவில் எஸ்ஐஆர் பணி 96.46 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. வரும் 11ம் தேதிக்குள் முழுமையாக முடிந்து விடும்.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், “எஸ்ஐஆர் மூலமாக கடந்த 2002-2005ம் ஆண்டிலிருந்து இதுவரை இறந்தவர்கள், முகவரி மாறி சென்றவர்கள், பட்டியலில் இல்லாதவர்கள் நீக்கப்பட்டனர். இப்போதுள்ளது தூய்மையான நிஜமான வாக்காளர்கள் கொண்ட பட்டியல். இதில் மீண்டும் பெயரை சேர்ப்பதில் எந்த தடையும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியும். அரசியல் கட்சியினர் குறிப்பிட்ட சிலரை சேர்க்கவில்லை என ஆதாரங்களுடன் விவரங்களை ஒப்படைத்தால் அது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டியலில் இல்லாததால், ஓட்டு சாவடிகளில் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே 1200 பேருக்கு மேல் உள்ள ஓட்டு சாவடிகளை பிரித்து ஒரு ஒட்டு சாவடிக்கு 1000 வாக்காளர்கள் என்ற அளவில் ஓட்டு சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதில் 459 புதிய ஓட்டு சாவடிகள் உருவாக்கப்பட்டது. வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதால் இதை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெறப்படும். அதற்கு பின்னரே முடிவு எடுக்கப்படும். மேலும் இறந்தவர்கள், ஆப்சென்ட், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்காளர்கள் குறித்த விவரங்கள் மாவட்ட அளவில் உள்ள 3117 ஓட்டு சாவடிகள். அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள், தாலூகா, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் வைக்கப்படும். பொதுமக்கள் வரும் 11ம் தேதிக்கு பிறகு இந்த விவரங்களை காண வழிவகை செய்யப்படும், ” என்றனர்.
