50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் இருந்தால் பறிமுதல்.. தேர்தல் கமிஷன் உத்தரவு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு (மானிட்டரிங் கமிட்டி) அதிகாரிகளின் கூட்டம் இன்று நடந்தது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வருவாய்த்துறை, வணிக வரி, உள்ளாட்சி, வருமான வரி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் தேதி அறிவித்ததும் நடைமுறைக்கு வந்து விடும்.
எனவே கண்காணிப்பு அதிகாரிகள் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு நபர் 50 ஆயிரம் ரூபாய் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேல் ஆதாரமின்றி பணம் வைத்திருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும். சந்தேகப்படும் வகையில் எந்த பொருட்கள் இருந்தாலும் பறிமுதல் செய்யலாம்.
யாருக்கும் தேவையின்றி சலுகை வழங்க கூடாது. அரசியல் கட்சியினர், அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. நான் யார் தெரியுமா எனக்கூறி அதிகாரம் காட்டி தப்ப முயற்சித்தால் விடக்கூடாது.
அனைத்து ஆதாரமில்லாத பொருள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைக்க வேண்டும். உரிய கணக்கை மற்றும் ஆதாரங்களை காட்டிய பின்னர் அவற்றை ஒப்படைத்து விடலாம் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் வணிக சங்கத்தினர், தொழில் நிறுவனத்தினர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில் தங்க நகை வியாபாரிகள், மளிகை வியாபாரிகள், ஆட்டோ மொபைல் உள்பட பல்வேறு தொழில் செய்பவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வணிகர்கள் எங்கே சென்றாலும் தங்கள் வசம் உள்ள நகை, பணம், பொருட்களுக்கு ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். இதில் யாருக்கும் எந்த சலுகையும் வழங்க முடியாது.
தினமும் அதிக பணம் வியாபாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கான ஆதாரம் வைத்திருங்கள். இல்லாவிட்டால் தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து தேர்தல் பிரிவினரும் முனைப்புடன் செயல்படுவார்கள்.
பொதுமக்கள், தொழில் நிறுவனத்தினர் எந்த ஆதாரம் இல்லாமல் தங்கள் வசம் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே வைத்திருக்கலாம் அதற்கு மேல் தொகை வைத்திருந்தால் அதற்கு உரிய கணக்கு ஆதாரம் காட்ட வேண்டும்.
மேலும் பொருட்கள் எதாவது கொண்டு சென்றால் அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். இல்லாவிட்டால் சந்தேக படும் வகையில் தேர்தலுக்காக ஒரு பரிசு பொருட்களாக கொண்டு செல்லப்படுவதாக கருதி அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
