கோவையில் ஓட்டுக்கு பணம்: தேர்தல் செயலியில் புகார் பெற பயிற்சி
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலமாக இஎஸ்எம்எஸ், சுவிதா, சி விஜில் இசிஐ நெட் வோட்டார் போன்ற செயலிகள் பயன்படுத்தும் முறை தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி தரப்பட்டது.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொழில் நுட்ப பிரிவினர் , தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த செயலிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்களை பெறுவது, இஎஸ்எம்எஸ் மூலமாக தேர்தல் செலவு கணக்கு விவரங்களை பெறுவது, மக்களின் புகார்களை செயலி மூலமாக பெற்று அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் தரப்பட்டது,
கடந்த காலங்களை போல் தேர்தல் முறைகேடுகள் செய்தவர்கள், ஓட்டுக்கு பணம் தந்தவர்கள் தப்பி செல்ல முடியாத வகையில் ஆன்லைன் திட்டங்களை அமலாக்க வேண்டும். இந்த செயலிக்கு தகவல் அனுப்பினால் அதன் பேரில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டு சாவடி விவரங்களை அறிய செயலியை பயன்படுத்தலாம். வோட்டார் ஹெல்ப் லைன் ஆப் மூலமாக பதிவு திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யலாம். சி விஜில் செயலி மூலமாக நடத்தை விதிகள் மீறல், தவறுகளை போட்டோ, வீடியோ ஆதாரங்களாக பெற முடியும். வேட்பாளர்கள் தொடர்பான முழு விவரங்கள்,
அவரின் குற்ற பின்னணி வழக்கு விவரங்களையும் அறிய கேஒய்சி வசதி இருக்கிறது. வாக்காளர் வருகை விவரங்களை அறிய வோட்டர் டர்ன் அவுட் செயலி இருக்கிறது. இந்த செயலிகளை தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்த வேண்டும். இதற்கு முறையான பயிற்சி தேவை. செயலியில் உரிய தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
