கோவையில் கஞ்சா, சிந்தடடிக் டிரக்… வீடியோ கான்பரன்சில் துணை தேர்தல் கமிஷனர் விசாரணை
சமீபத்தில் கோவை ரயில் நிலையத்தில் வரும் முதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.. (பைல் படம்)
கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் பானு பிரகாஷ் யத்ரூ இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த முறை தேர்தல் ஆணைய துணை கமிஷனர் தான் ஆய்வுக்கு வந்த போது விவாதித்த பிரச்னைகளுக்கு என்ன தீர்வு காணப்பட்டது என அதிரடியாக கேட்டார்.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் ரயில்களின் மூலமாக வெளி மாநிலங்களில் இருந்து போதை பாக்கு, கஞ்சா, சிந்தடிக் போதை பொருட்கள், கஞ்சா சாக்லெட், கஞ்சா ஆயில், ஹெராயின் வருவதாக புகார் வந்துள்ளது.
மத்திய புலனாய்வு பிரிவு (ஐபி) ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது, மாவட்ட அளவில் போதை பொருட்கள் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் போது எப்படி தேர்தல் நடத்துவீர்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தீர்கள், குற்றவாளிகளை பிடித்தீர்களா பறிமுதல் செய்த போதை பொருட்களின் விவரங்கள் என்ன, இனியும் போதை பொருட்கள் வந்தால் என்ன செய்வீர்கள், ஒருங்கிணைந்த செயல்பாடு இருக்கிறதா என அவர் கேட்டார்.
அப்போது மாநகர் மற்றும் மாவட்ட போலீசார், கஞ்சா, குட்கா தடுக்க எடுத்த நடவடிக்கை விவரங்களையும், பறிமுதல் செய்த போதை பொருட்கள், சிந்தடிக் டிரக் விவரங்களையும் தெரிவித்தனர். இதை கேட்ட துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் யத்ரூ, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன் போதை தடுப்பு நடவடிக்கை தீவிரமாக இருக்க வேண்டும்.
போதை இல்லாத சூழல் இருந்தால் தான் சரியான முறையில் தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்தார். மேலும் போதை பொருட்கள் கடத்தல், குற்றவாளிகள் தொடர்பாக விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை அமைப்பது தொடர்பாகவும் விவாதம் நடந்தது. மது பாட்டில்கள் சப்ளை, 24 மணி நேரமும் தடை இன்றி மது பாட்டில் சப்ளை விவகாரம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போதை பொருட்கள் உச்சகட்டமாக பயன்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரத்தை இந்திய தேர்தல் அதிகாரி கிளப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க முடியும் விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
