தமிழக முதல்வர் கோவை வருகை: பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் இன்று கோவை வருகிறார். மாலை 4 மணி அளவில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு சக்தி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான திமுக பாத முகவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இதில் சுமார் 1.50 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பில் கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பையும், சீரான போக்குவரத்தையும் உறுதி செய்யும் வகையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் – கேரளா வழித்தடம்:
சேலம் இருந்து கோவை நோக்கி வரும் கண்டெய்னர் லாரிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் அனைத்தும் அவிநாசி – மங்கலம் – பல்லடம் – கரடிவாவி – செலக்கரசல் – பாப்பம்பட்டி – செட்டிபாளையம் – ஒத்தக்கால் மண்டபம் – மலுமிச்சம்பட்டி – போடிபாளையம் பிரிவு வழியாக மாற்று பாதையில் சென்று கேரளா மாநில எல்லை நோக்கி செல்ல வேண்டும்.

கேரளா – கோவை வழித்தடம்:


கேரளா மாநிலத்திலிருந்து கோவை நோக்கி வரும் கண்டெய்னர் லாரிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் அனைத்தும் போடிபாளையம் பிரிவு – மலுமிச்சம்பட்டி – ஒத்தக்கால் மண்டபம் – செட்டிபாளையம் – பாப்பம்பட்டி பிரிவு – செலக்கரசல் – காரணம்பேட்டை – கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பு வழியாக சென்று கோவை, திருப்பூர் மற்றும் சேலம் நோக்கி செல்ல வேண்டும்.

சிந்தாமணி புதூர் முதல் நீலாம்பூர் வரை உள்ள பைபாஸ் வழியாக செல்லும் இலகு ரக வாகனங்கள் மாற்று வழித்தடம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றன.
கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சூலூர் பிரிவு – சூலூர் – சிந்தாமணி புதூர் வழியாக சிங்காநல்லூர் சென்றடைந்து கேரளா நோக்கி செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் நேரத்தில் மட்டும் இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *