கோவையில் தீபாவளி பர்சேஸ்… கடைக்கு செல்வோருக்கு தொந்தரவு..
கோவை நகரில் தீபாவளி பர்சேஸ் கூட்டம் களை கட்டியது.
பெரிய கடை வீதி, ராஜ வீதி ஒப்பணகார வீதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, ஆர்எஸ் புரம் பகுதிகளில் உள்ள வணிக கடைகளில் மக்கள் குவிந்து வருகிறார்கள். நேற்று விடுமுறை நாளாக இருந்தகால் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது, இந்த நிலையில் வணிக கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர், ரோட்டிற்கு வந்து வாடிக்கையாளர்களை கூவி கூவி அழைக்கிறார்கள்.
சிலர் நடுரோடு வரை வந்து நின்று அக்கா, அம்மா எங்க கடைக்கு வாங்க என வழிமறித்து அழைக்கிறார்கள். சிலர், கைகோர்த்து நிற்பதால் அவர்களை கடந்து ரோட்டில் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் விரும்பும் கடைகளுக்கு செல்ல விடாமல் இங்கே வாங்க, குறைஞ்ச விலை தான் என கடை ஊழியர்கள் தொந்தரவு தருவதாக மக்கள் புலம்புகின்றனர். சிலர் நடுரோட்டில் பொருட்களை வைத்து இந்த மாதிரி துணி கம்மி விலையில் கிடைக்கும் என காட்டுகிறார்கள். ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதியில் இதுபோன்ற வற்புறுத்தல் அழைப்புகளால் பர்சேஸ் செய்ய செல்வோர் தவிப்படைந்துள்ளனர். போலீசார் இதுபோன்ற நிலையை தவிர்க்க கண்காணிப்பு பணி நடத்த வேண்டும். பொதுமக்கள் விரும்பும் கடைகளுக்கு சென்று வரும் வகையில் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
