கோவையில் 149 கோடி ரூபாயில் ரோடு சீரமைப்பு பணிகள்…
கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் பழுதடைந்து பள்ளம் மேடுமாக மாறிவிட்டது. இந்த சாலைகளை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி கோரப்பட்டு இருக்கிறது.
நடப்பு ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் நெடுஞ்சாலை கோட்டம் 1 சார்பில் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு மேம்பாட்டு பணிகள் நடத்த வேண்டியுள்ளது. இதற்கு சுமார் 50 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இந்த தொகை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கோட்டம் 2 சார்பில் 69 கோடி ரூபாய் செலவில் சாலை சீரமைப்பு பணிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
மாவட்ட அளவில் சுமார் 100 கி.மீ தூரத்திற்கு 149 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடத்த வாய்ப்புள்ளது. தமிழக அரசு இதற்கான நிதியை விரைவில் ஒதுக்கி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட அளவில் பழுகடைந்த ரோடுகள் சீரமைக்கவேண்டிய கட்டாய நிலையிருக்கிறது. மழையின் காரணமாக சாலைகள் அதிகளவு நாசமாகிவிட்டது. ஏற்கனவே விரிசல் விட்ட சாலைகள் பலஇடங்களில் தார் தளம் காணாமல் போய் பொத்தல் பொத்தலாக மாறி விட்டது.
சாலை இன்றி சில பகுதிகள் மண் பாதைகளாக மாறி விட்டது. இவற்றை விரைவாக சீரமைக்காமல் விட்டால் விபத்து, போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விடும் எனவே ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதியை வழங்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கோவை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைப்பதற்கு 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு சீரமைப்பு பணிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை துவக்கி இருக்கிறது. பல இடங்களில் இதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் இன்னும் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை முடிக்கவில்லை.
முடிக்காத திட்டப்பணிகள் நடக்கும் இடங்களிலும் ரோடு பணிகளை நடத்தினால் சாலை சேதமாகும் நிலையிருக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் பணிகளை விரைவாக முடித்து நெடுஞ்சாலைத்துறை வசம் சாலையை ஒப்படைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம், துடியலூர் வட்டாரத்தில் அதிகளவு பணிகள் நடத்த வேண்டியிருக்கிறது. மருதமலை சாலை தோண்டி போடப்பட்டதால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருவதாக புகார் வந்தது. சோசியல் மீடியாக்களில் ரீல்ஸ் அதிகமானது. இந்த பகுதியில் விரைவாக பணிகள் துவக்கப்பட்டிருக்கிறது. சாலை விரிவாக்கம் செய்யும் பணியும் துவக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் பாதாள சாக்கடை,
குடிநீர் பணிக்காக தோண்டிய இடங்கள் மட்டுமின்றி முழு ரோடும் சீரமைக்கப்படுகிறது. எனவே எந்த இடத்திலும் மாநில நெடுஞ்சாலை ரோடு பேட்ச் ஆக பணி நடத்தவில்லை. பழைய புதிய சாலை மேடு பள்ளமாக இருக்காது. ஒரே சமநிலையில் சாலை பணி நடத்தப்படுவதாக மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
