காட்டு பன்றிகளை சுட்டு தள்ளுங்க… விவசாயிகள் ஆவேசம்..
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் வனத்துறை, மின் வாரியம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சிகள், வேளாண்மை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் விவசாயி நாயக்கன்பாளையம் தேவராஜ் புகார் அளித்து பேசுகையில், “”வன விலங்கு பாதுகாப்பு
சட்டத்தை திருத்த வேண்டும். கடந்த 15 ஆண்டாக வன விலங்குகள் ஊருக்குள் வந்து செல்கின்றன. இப்போது உச்ச கட்டமாக அதிகமாகி விட்டன. மனித உயிர்களை கொல்வதும் அதிகமாகி விட்டது. நாங்கள் புகார் தந்து ஓய்ந்து போய்விட்டோம். வனத்துறை, வன ஆர்வலர்கள் மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றும் வகையில் தகவல் தருகின்றனர். காட்டு பன்றிகள் வனத்தை விட்டு 30 கி.மீ தூரத்திற்கு அதிகமாக சூலூர் கோதவாடி பகுதியில் சுற்றுகின்றன. யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கு சிறிய இழப்பீடு கிடைக்கிறது. மற்ற வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு கிடைப்பதில்லை, ” என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி பேசுகையில், “காட்டு பன்றிகளை விரட்ட அனுமதி வழங்க வேண்டும் விவசாயிகளுக்கான புதிய விதை சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும். தென்னை மரங்களுக்கு தனி பயிர் காப்பீடு திட்டம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் தாமதம் இன்றி வழங்க வேண்டும், “ என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி பேசுகையில், “காட்டு பன்றிகள் விவசாய தோட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது காட்டு பன்றிகளை சுட வனத்துறையினர் தீவிரம் காட்ட வேண்டும். கடந்த காலங்களை விட இப்போது வன விலங்குகளால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது, இனியும் தாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், ” என்றார்.
கவுசிகா நதி மேம்பாட்டு சங்கத்தினர் அளித்த புகார் மனுவில், “சின்னதடாகம், பொன்னூத்து பகுதியில் 30க்கும் மேற்பட்ட பிரதான ஓடைகளை சீரமைக்க வேண்டும். மாங்கரை, தடாகம் நீர் பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும். அங்கேயுள்ள ஓடைகளை சீர் செய்ய வேண்டும் பன்னிமடைதாண்டி மழை நீர் பாய்ந்து செல்ல முடியாத நிலையிருக்கிறது. கோவையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வேறு நீர் ஆதாரங்கள் இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போயிருக்கிறது. “ என்றனர்.
பொள்ளாச்சி சவுந்திரமணி, ரேணுகா தேவி. செந்தில்வேல், வருண்குமார் அளித்த புகாரில், “நாங்கள் பொள்ளாச்சி உடுமலையில் விவசாயம் செய்து வருகிறோம். விவசாய வேலைக்கு டிராக்டர் வாங்க திட்டமிட்டோம் டிராக்டருக்கு மானியம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து விட்டார்கள். எங்கள் பகுதியை சேர்ந்த ஏஜன்சி நிறுவனத்தை நம்பி பணம் கட்டி ஏமாந்து விட்டோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர் இந்த கூட்டத்தில் காட்டு பன்றிகள் பிரச்னை தீவிரமாக விவாதிக்கப்பட்டது. தோட்டங்களுக்கு வரும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரிரு காட்டு பன்றிகளை வனத்துறையினர் சுடுவது போதாது அதிக நடவடிக்கை தேவை கூட்டமாக காட்டு பன்றிகள் சுற்றுகின்றன. தாக்க வரும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டு பன்றிகளை தீவிரமாக விரட்ட விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
