வெள்ளலூரில் அகழ்வாராய்ச்சி: பழங்கால பொருட்கள் சேகரிப்பு…
தொல்லியல் துறை சார்பில் கோவை வெள்ளலூர் உள்பட 8 இடங்களில் அகழாய்வு செய்ய ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது.
அகழாய்வின் போது கண்டெக்கப்படும் தொல்பொருட்கள் மற்றும் முக்கிய கலைப்பொருட்களின் பட்டியலை டெல்லியில் உள்ள ஒன்றிய தொல்லியல் துறை இயக்குனரகத்திற்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை வெள்ளலூர் பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த வெள்ளலூர் பகுதி சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மற்றும் நொய்யல் நதிக்கரையோம் அமைந்துள்ள பழமையான ஊராகும். இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் சுமார் கி.மு.3-ம் நூற்றாண்டு முதல் பாலக்காட்டு கணவாய், மேற்கு கடற்கரை வழியே ரோமானியர்களுடன் வணிக தொடர்பு வைத்துள்ளனர்.
இந்த ஊரில் கடந்த 1842, 1871, 1932-ம் ஆண்டுகளில் பூமிக்கடியில் மண் பானைகளில் சுமார் 1,213 ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை அகஸ்டஸ், திபிரியெஸ் காலத்தை சேர்ந்தவையாகும். அப்போதே ரோமனிய அணிகலன்களும் கிடைத்துள்ளன. தவிர, இங்குள்ள தேனீஸ்வரர் கோயில் மண்டபத்தூணில் சந்திராதித்த குலத்தை சேர்ந்த கோக்கண்டன் வீரநாரயணன், கோக்கண்டன் ரவி ஆகியோரது காலத்து கல்வெட்டுகள் உள்ளன.
இந்த மன்னர்களை சேரர் எனவும் களப்பிரர் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த கோயிலுக்கு அருகே தற்போது அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையில் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, இரண்டு இடங்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதில், கோயில் அருகேயுள்ள பகுதியில் 5 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடக்கிறது.
இதன் அருகே சுமார் 500மீ தொலைவில் மற்றொரு இடத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழிகளில் தற்போது வரை பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் அணிகலன்கள், சங்கு வளையல்கள், மண்பானைகள், பானை ஓடுகள், மணிகள் உள்பட பல தொல்பொருட்கள் கிடைத்து உள்ளன.
தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: வெள்ளலூர் பகுதிகளில் கிடைக்கப்பெற்ற ரோமானிய நாணயங்கள் மற்றும் பழங்காலப்பொருட்கள் முறையான அகழாய்வின் மூலம் கிடைத்தது இல்லை. அது அந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டவை மட்டுமே.
இதன் உண்மை தன்மை மட்டும் இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வு முறையை கண்டறியும் வகையில், தற்போது தான் முதல் முறையாக வெள்ளலூர் பகுதியில் அகழாய்வு நடத்தப்படுகிறது.
இந்த அகழாய்வு துவங்கப்பட்ட 3 மாதங்களிலேயே எங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நாங்கள் தேர்வு செய்திருந்த பகுதியில் ஒரு அடி குழி தோண்டியது முதல் பொருட்கள் கிடைக்கப்பெற்றன.
வரும் செப்டம்பர் மாதம் வரை குழிகள் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு கிடைக்கும் பொருட்களை சேகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். பின்னர், ஜனவரி மாதத்திற்குள் அறிக்கையை அளிக்கவும் முடிவு செய்து பணிகளை செய்து வருகிறோம்.
தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய வட்ட வடிவிலான செப்பு காசுகள், நூல் நூற்கப் பயன்படுத்தப்படும் சுடுமண் தக்ளி, கண்ணாடி மணி, சங்கு வளையல்கள் மற்றும் உடைந்த பானைகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இது இப்பகுதியில் 1,500 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்து இருக்கலாம் என்ற ஆதாரங்களை காட்டுகிறது. இருப்பினும் இங்கு கிடைக்க பெறும் பொருட்களை முழுமையாக ஆய்வு செய்தால் தான் மக்கள் வாழ்ந்த காலத்தை சரியாக கணிக்க முடியும். செப்பு காசுகள் ரோமானியர்களுடன் தொடர்பு உள்ளதா? என்பதை நிரூபிக்க நமக்கு இன்னும் சில ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.
இந்த பணிகள் விரைந்து முடித்து முழு அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
