கோவையில் போதை மருந்து ஊசி பதுக்கிய வாலிபர் கைது…
கோவை காந்திபுரம், ராம்நகர் கோகுலம் வீதி பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காட்டூர் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் போதைக்கு பயன்படுத்தக்கூடிய ‘மெபென்டர்மைன் சல்பேட் மற்றும் ஊசிகள் மற்றும் போதை மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் செல்வபுரம், ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த சகாபுதீன் (36) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சகாபுதீனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவரிடமிருந்து 82 மெபென்டர்மைன் சல்பேட் ஊசி பாட்டில்கள், 250 இன்சுலின் ஊசிகள், போதை மாத்திரைகள் மற்றும் ஒரு செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பல மணி நேரம் போதை தரும் இந்த சிந்தடிக் போதை மருந்து எங்கே யார் மூலம் வாங்கப்பட்டது இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
