Mins violation: கோவை மாவட்டத்தில் 11 கல் குவாரிகளுக்கு நோட்டீஸ்…!

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது.

புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும் தினமும் எத்தனை கனமீட்டர் அளவிற்கு கனிம பொருட்கள் சேகரிக்கப்படுகிறது.

கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக கண்டறியப்பட்டு வருகிறதா, கேரளா மாநிலத்திற்கு சப்ளை செய்யப்படும் கனிமங்கள் அளவு குறித்த விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 5 குழுக்களாக பிரித்து டிரோன் சர்வே நடத்தப்படுகிறது.

இதில் 52 குவாரிகளில் சர்வே பணி முடிக்கப்பட்டது. இன்னும் 2 வாரங்களில் மொத்த சர்வே பணியும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில் 11 கல் குவாரிகள் முறைகேடு, விதிமுறைகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த குவாரிகளுக்கு கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை சார்பில் விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஒரு வார காலத்திற்குள் விளக்கம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கல் குவாரிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருவதாக தெரிகிறது. கனிம வள சட்டத்தில் கடந்த கடந்த 2015ம் ஆண்டில் இருந்து பல்வேறு திருத்தங்கள், மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

புதிய சட்ட விதிமுறைகள் கொண்டு வரும் முன் இயங்கிய அதிக ஆழத்தில் கல் எடுத்த, பரப்பளவில் மாறுபாடு உள்ள குவாரிகள் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுப்பதாக தெரிகிறது. பழைய குவாரிகளின் மீது புதிய விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்க கூடாது.

விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பின்னர் முறைகேடுகள் நடந்திருந்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கலாம் என குவாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசின் கஜானாவிற்கு உரிய வருவாய் தராமல் மோசடி செய்தது, குத்தகை, உரிமம், குவாரி பரப்பில் முறைகேடு செய்தது போன்றவற்றின் மீது கடும் நடவடிக்கை பாயும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மாவட்ட அளவில் 70 முதல் 80 சதவீத குவாரிகள் விதி மீறல் விவகாரத்தில் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கியிருக்கிறது. சில குவாரிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்களுக்காக மூடப்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது. குவாரி தொழிலில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக கோவை மாவட்டத்தில் கட்டுமான தொழில் செய்பவர்கள் தவிப்படைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *