டாய்லெட் இல்லைங்க.. பாத்ரூம் போக முடியல… பெண்கள் புகார்
கோவை மாநகராட்சி மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், “
கோவை மாநகராட்சி 26வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு அவிநாசி ரோடு மேம்பால பணி காரணமாக யூடர்ன் முறையில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து பீளமேட்டுக்குள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது மேம்பால பணிகள் முடிவுற்று 6 மாதங்கள் ஆகி விட்டது. இன்னும் யூ டர்ன் முறையை மாற்றம் செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். இதனை மாற்றி போக்குவரத்துக்கு ஏதுவாக மாற்றம் செய்ய வேண்டும். மேலும் அவிநாசி சாலையில் யூ டர்ன் முறையை அகற்றி சந்திப்புகளில் சிக்னல் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் வீதியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் அளித்த புகாரில், “எங்கள் வீட்டின் அருகே கோனியம்மன் கோயில் சமையல் கூடம் கட்டும் பணிக்காக ஜேசிபி மூலமாக அஸ்திர வார குழி தோண்டினார்கள். இதில் கருங்கல் காம்பவுண்ட் சுவர் விழுந்து விட்டது. இதனால் இந்த பகுதி வீடுகளில் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழுதினை சரி செய்து தர வேண்டும்,” என தெரிவித்தனர்.
நாம் தமிழர் கட்சியினர் அளித்த மனுவில், ” இருகூர் பேரூராட்சியின் குப்பை கழிவுகளை ஆற்றில் கொட்டி மாசு செய்து வருகிறார்கள். இதை தடுக்க வேண்டும். ஆற்றை மாசு சூழலில் இருந்து மீட்க வேண்டும், மேலும் கோவை காட்டூர் பகுதியில் பெரியார் சிலை இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சிலை வைக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.
எச்எம்எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் அளித்த மனுவில், “கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனசாக 7 ஆயிரம் ரூபாய், மாத ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சங்கத்தின் மாநில செயல் தலைவர் ராஜாமணி, மாநில துணை தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் அளித்த புகாரில், “எங்கள் பகுதியில் 250 வீடுகள் இருக்கிறது. எந்த வீட்டிலும் கழிவறை கிடையாது. பொது இடங்களை திறந்த வெளி கழிவறையாக பயன்படுத்தி வருகிறோம். எங்களுக்கு இதுவரை பேரூராட்சி நிர்வாகம் கழிவறை கட்டி தரவில்லை. நாங்கள் பயன்படுத்திய திறந்த வெளி இடத்தில் தற்போது கட்டுமான பணி நடக்கிறது. எனவே நாங்கள் மலம் ஜலம் கழிக்க முடியாத நிலைமை இருக்கிறது. எங்களுக்கு பொது கழிவறை கட்டி தர வேண்டும். தனி கழிவறை கட்ட எங்கள் வீட்டில் இடமில்லை,” என்றனர்.
