காட்டுத்தீ தடுக்க பயர் லைன்..
கோவை வனக்கோட்டத்தில் 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்திருக்கிறது.வனத்தில் வெயில் தாக்கம் வரும் காலங்களில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெயில் தாக்கத்தில் காட்டு தீ பரவல் தடுக்க பயர் லைன் என அழைக்கப்படும் தீ தடுப்பு கோடு அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. கோவை வனப்பகுதியில் கோவை, போளுவாம்பட்டி மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் காரமடை, மேட்டுப்பாளையம் வனசரக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் சுமார் 100 கி.மீ தூரத்திற்கு தீ பரவாமல் இருக்க பயர் லைன் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தீ தடுப்பு பாதைகளில் புதர் செடிகள் வளர்ந்து மூடிகிடப்பதாக தெரிகிறது. இவற்றை சீரமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். முட்புதர் காய்ந்த செடி, கொடிகளை அகற்றி விட்டு பாதைகளை காலியாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
X
தீ அபாய பகுதியில் உள்ள சருகுகள் அகற்றி விட்டால், குறிப்பிட்ட சில பகுதியில் தீ பிடித்தாலும் மற்ற பகுதிக்கு பரவி பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியும். வனப்பகுதி ரோடு,மலைக்கோயிலுக்கு தீ பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வன கோயில்களில் வரும் நாட்களில் விழாக்கள் நடத்தப்படவுள்ளது. குறிப்பாக வெள்ளிங்கிரி மலை, அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோயில்,மருதமலை கோயில்களில் அடுத்து விசேஷ விழாக்கள்
நடத்தப்படும். இங்கே தீ தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சில இடங்களில் வன எல்லைக்குள் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களுக்கும் மக்கள் கூட்டமாக செல்கின்றனர். வழிபாடு நடத்தி விட்டு தீ பொருட்களை அப்படியே விட்டு செல்கிறார்கள். இதனால் தீ பரவுகிறது. கோயில்களுக்கு செல்பவர்கள் தீ பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆடு,மாடு மேய்ச்சலுக்கு செல்பவர்களும் தீ பிடிக்கும் பொருட்களை எடுத்து
செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
