ரூ 100 கோடியில் போத்தனூர் ரயில்வே பணிகள் தாமதம்

கோவை ஈரோடு மார்க்கத்தில் போத்தனூர், வடகோவை முக்கிய ரயில் நிலைய சந்திப்பாக இருக்கிறது. இதில் போத்தனூர் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக இருக்கிறது.கோவை ரயில் நிலையத்தில் இட நெருக்கடி இருப்பதால் போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டியது. 100 கோடி ரூபாய் மதிப்பில் அமரித் பாரத் திட்டத்தில் பில் லைன்,யார்டு, டெர்மினல், பயணிகள் வசதிகள், பார்க்கிங், கழிவறை என கூடுதல் வசதிகள் செய்யப்படுகிறது.

வரும் காலத்தில் கோவையை விட போத்தனூர் தான் முக்கிய ரயில் சந்திப்பாக இருக்க போகிறது. கோவை நகரில் வரும் காலத்தில் மெட்ரோ ரயில் அல்லது மோனோ ரயில் சேவை வர வாய்ப்புள்ளது. அப்படி திட்டம் வந்தால் கோவை மார்க்கமாக கேரளா செல்லும் ரயில்களின் சந்திப்பு நிலையமாக போத்தனூர் மாறி விடும். கடந்த 3 ஆண்டிற்கு முன் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட்டு இன்னும் முடியவில்லை.சில மாதம் முடிய வேண்டிய பணிகளை தொடர்ந்து நீட்டித்துள்ளனர். வரும் மார்ச் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க சொல்லியிருப்பதாக ரயில்வே நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

இதேபோல் வடகோவை ரயில் நிலையம் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இது என்எஸ்ஜி 6 என வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதில் இரண்டு நடைமேடைகள் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 29 ரயில்கள் நிறுத்த வசதியுள்ளது. காந்திபுரம், குறுக்கு சாலை மற்றும் 100 அடி சாலைக்கு அருகில் உள்ள வணிக பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி,டாடாபாத் பாப்பநாயக்கன்பாளையம், ரத்தினபுரி, சிவானந்தா காலனி, காந்திபுரம், பூமார்க்கெட் போன்ற பகுதிக்கு அருகில் உள்ளது. பிரதான ரயில் நிலையமாக மாறி வரும் வடகோவை சீரமைப்பு திட்டத்திற்காக 11.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயணிகள் நுழைவு, வெளியேறு, பயணிகள் முனைய கட்டடங்கள், பார்க்கிங், காத்திருப்பு கூடங்கள், கழிப்பறைகள், லிப்ட் வசதி. மேல் பாலம் மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள சில வசதிகளை மேம்படுத்தும் பணி நடக்கிறது. கடந்த ஆண்டு முடிய வேண்டிய பணிகள் இன்னும் நீடிக்கிறது.

ரயில் பயணிகள் கூறுகையில், “வடகோவை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உதவியாக இரண்டு கூடுதல் நடைமேடைகள் உடனடியாக கட்டப்பட வேண்டும். கூடுதல் பிளாட்பாரங்கள் கட்ட வேண்டும். கண்ணூர்,சொர்னூர், பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் மதுரைக்கு செல்லும் ரயில்கள் வடகோவை ஸ்டேஷனில் இருந்து புறப்படும் போது கூடுதல் வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும் கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் நெரிசலை குறைக்கும் வகையில் வட கோவை ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ், ரயில்களை நிறுத்தி இயக்க வேண்டும். “என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *