கோவை அரசு பொருட்காட்சி துவக்கம்…
கோவை வஉசி மைதானத்தில் அரசு பொருட்காட்சி இன்று துவங்கியது.
இதில் மாநகர போலீஸ், குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, வனத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 அரங்குகள், தனியார் சார்பில் சுமார் 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. வனத்துறை அரங்கில் 4 தந்தம், ஒரு காட்டெருமை தலை, 2 சிறுத்தை வடிவமைப்பு மற்றும் சில போட்டோக்கள் வைத்திருந்தனர்.
அதிகமான பொருட்கள் வைக்க கூடிய இந்த அரங்கம் குப்பை கூளமாக அசுத்தமாக காணப்பட்டது. காஸ் பாரஸ்ட் மியூசியம், அரிய வகை வன பொருட்கள் இருந்தும் காட்சிப்படுத்த வனத்துறையினர் முயற்சி செய்யாமல் போட்டோ அரங்கமாக இருந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். எப்போது சிறப்பாக உருவாக்கப்படும் அரசு மருத்துவ கல்லூரி அரங்கம் இந்த முறை அமைக்கப்படவில்லை.
மனித எலும்பு கூடு, மனித கருவின் பல்வேறு கால கட்ட நிலைகள், மனித உறுப்புகள் குறித்து மக்கள் விளக்கமாக தெரிந்து கொள்ள உதவியாக இருந்த இந்த அரங்கம் அமைக்கப்படவில்லை. பெரும்பாலான அரங்குகள் போட்டோ காவரியாக இருந்தது. மக்கள் திட்டங்களை தெரிந்து கொள்ள அரங்கு உருவாக்கவில்லை.
துவக்க விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை, செய்தி துறை அமைச்சர் ராஜ் மோகன் கலந்து கொண்டு, “நல்லவர்களே வல்லவர்களே, நாலும் தெரிந்தவர்களே, சொந்தங்களே, பந்தங்களே, முதல்வர் ஜோசப் விஜய் நெஞ்சில் குடியிருக்கும் மக்களே, சிறுவாணி தண்ணீரை சொல்வதா, மருதமலை மாமணியே முருகய்யா என்பதா என பேசினார். தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அதிகாரிகள், அரசு துறைகள் பெயர் விவரங்களை வாசித்தார்.
விழா முடிந்ததும், அமைச்சர்கள் சென்ற பின்னர் அவர்கள் அமர்ந்த நாற்காலியில் உட்கார்ந்த தவெகவினர் ‘ரீல்ஸ்’ எடுத்து இன்ஸ்ட்டா, யூ டியூப்பில் போட்டு மகிழ்ந்தனர். இதில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
45 நாட்களுக்கு மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடத்தப்படவுள்ளது. பெரியவர்களுக்கு 15 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய் மாணவர்களுக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
