கோவை துணிக்கடை வளாகத்தில் கஞ்சா செடி
கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் பிரபலமான துணிக்கடையின் வாகன நிறுத்துமிடம் இருக்கிறது. இங்கே 3 அடி உயரத்தில் கஞ்சா செடி இருந்தது. இது தொடர்பாக கஞ்சா செடியின் போட்டோவுடன் தகவல் பரவியது. ரத்தினபுரி போலீசார் அங்கே சென்று விசாரித்தனர். நன்கு செழிப்பாக வளர்ந்த கஞ்சா செடியை வேறுடன் பிடுங்கி நேற்று அகற்றினர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா செடி விவகாரம் சமூக வலை தளங்களில் வீடியோ பதிவுடன் வைரலாகியது. செடியை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்த நபர் யார், பார்க்கிங் ஏரியாவில் எப்படி கஞ்சா செடி வளர்க்கப்பட்டது யாராவது கஞ்சா பயன்படுத்தி விதையை தூக்கி வீசியிருந்தால் இந்த அளவிற்கு வளருமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜவுளிக்கடை நிர்வாகிகளிடம் போலீசார் விசாரித்த போது அது கஞ்சா செடி அல்ல, அரளி செடி எனக்கூறி ஏமாற்ற முயன்றதாக தெரிகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வெளிப்படையாக கஞ்சா செடி வளர்த்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை மூடி மறைக்க கூடாது.
ஜவுளிக்கடையில் அதிக நபர்கள் வேலை செய்கிறார்கள். இங்கே வேலை செய்யும் நபரால்” கஞ்சா செடி வளர்க்கப்பட்டதா, கஞ்சா செடி இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா, செடியை நீர் ஊற்றி யாராவது வளர்த்தார்களா என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கஞ்சா செடி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
