கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஓட்டு செயல் விளக்கம் முடக்கம்
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3524 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சூலூர் ,மேட்டுப்பாளையம் ,தொண்டாமுத்தூர் வால்பாறை சிங்காநல்லூர், கோவை வடக்கு ,தெற்கு உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு போடுவது தொடர்பான செயல் விளக்கம் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதன்படி மாவட்ட வாரியாக ஆர்டீஓ அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டு பதிவு மெஷின், கட்டுப்பாட்டு மெசின் , சின்னம் காட்டும் மெஷின் போன்றவற்றை வைத்து பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டு வருகிறது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு மெஷினில் முறையாக செயல் விளக்கம் நடக்கிறது. ஆனால் தொண்டாமுத்தூர் தொகுதிக்கான கோவை தெற்கு ஆர்டீ ஓ அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஓட்டு பதிவு மெஷின் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை காணவில்லை.
ஆனால் ஓட்டு பதிவு மெஷின் வைக்கப்பட்ட மேஜை மற்றும் நாற்காலிகள் அப்படியே உள்ளது. அலுவலர்கள் மெஷினை அலுவலக அறைக்குள் வைத்து பூட்டி வைத்து விட்டு அந்த மேஜையை அலுவலகப் பணிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல் வரை பொதுமக்கள் ஓட்டு போட பயிற்சி பெற விரும்பினால் இந்த மெஷினில் பயிற்சி தர வேண்டும்.
அலுவலக வேலை நாட்களில் இந்த மெஷின்கள் முறையாக இயக்கப்பட வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை மதிக்காமல் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் மெஷினை ஓரம் கட்டி வைத்து விட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ” ஓட்டு மெஷினை செயல் விளக்கத்திற்கு பயன்படுத்தாது தொடர்பாக விளக்கம் கேட்கப்படும் . உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்த சூழ்நிலையிலும் தேர்தல் கமிஷன் உத்தரவை அலட்சியப்படுத்தக் கூடாது,” என்றனர்.
