கோவை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு குவிந்த பெண்கள்..!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், வழக்கத்தை விட அதிகளவு பெண்கள் வந்திருந்தனர். மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்களை குவித்து வந்தனர். இதனால் அதிகாரிகள் தவிப்படைந்தனர்.
தமிழக அரசு எற்கனவே மகளிர் உரிமை தொகை பெற்று வரும் பெண்களின் வங்கி கணக்கில் முன் தொகை உள்பட 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தது. இது மகளிர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் மகிழ வைத்தது. மாநில அளவில் 1.30 கோடி பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்ற நிலையில் கோவை மாவட்ட மகளிர் பலர் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை வேண்டும் என கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர் .
மதுக்கரை, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு, அன்னூர் வட்டாரத்தில் இருந்து அதிக பெண்கள் வந்திருந்தனர் . கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், புகார் மனு கொடுக்கும் பகுதியை அடைத்து அங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பெண்கள் சிலர் போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்து தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக மகளிர் கூறுகையில், “எங்களில் பலர் எற்கனவே இரு முறைக்கு மேல் உரிமை தொகை கேட்டு விண்ணப்பம் வழங்கியிருந்தோம் சிவருக்கு உரிமை தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது.
ஆனால் வங்கி கணக்கு இதர விவரங்கள் பொருந்தவில்லை எனக்கூறி உரிமை தொகை வழங்கவில்லை. தகுதி இருந்தும் வீடு வீடாக ஆய்வு செய்து பார்க்காமல் சிலரின் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டனர். தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் விண்ணப்பித்தும் அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. எங்களை போல் உள்ள பலர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். ஆனால் எங்களுக்கு நிராகரிக்கப்பட்டதால் நாங்கள் விரக்தியில் இருக்கிறோம். மாவட்ட நிர்வாகம் எங்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திமுக ஆட்சி காலத்தில் எங்களுக்கு உரிமை தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், “என தெரிவித்தனர்.
