கோவையில் ஓடும் பஸ்ஸிலிருந்து மாணவி காயம்
திருப்பூரில் இருந்து கோவைக்கு இன்று அதிகாலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் கல்லூரி மாணவி ஒருவரும், அவருடன் வாலிபர் ஒருவரும் பயணம் செய்தனர். பஸ்சில் இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தனர். சிறிது நேரத்தில் பஸ்சுக்கு உள்ளேயே இருவருக்கும் திடீரென்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தபடியே பஸ்சில் பயணம் செய்துள்ளனர்.
இதற்கிடையே பஸ் அவிநாசி – கோவை ரோட்டில், ஜி டி மியூசியம் அருகே நெருங்கியபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மிகவும் கடுமையானது.
பயணிகள் கண்டித்தும், கண்டக்டர் சமாதானம் செய்தும் வாலிபர் கேட்காததால் மன உளைச்சல் அடைந்த மாணவி திடீரென்று பஸ்சின் படிக்கட்டுக்கு சென்றார். பிறகு திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் பஸ்சிலிருந்து ரோட்டில் குதித்தார். அந்த வழியாக சென்றவர்கள்
மாணவி ஒருவர் பஸ்சில் இருந்து குதிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் தலையில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் . இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியும் வாலிபரும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
