கோவை மாநகராட்சி கூட்டம் 10 நிமிடத்தில் 143 தீர்மானம் நிறைவேற்றம்
கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது. இதில் மேயர் ரங்கநாயகி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ரோடு சாக்கடை கால்வாய் மழை நீர் வடிகால் தெரு மின் விளக்குகள் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்வது தொடர்பாக 143 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானங்கள் முழுமையாக படிக்காமல் பத்து நிமிடத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தீர்மான தலைப்புகளை படிக்க கூட அவகாசம் தராமல் அவசரமாக இத்தனை தீர்மானங்களை நிறைவேற்றியது ஏன் எனக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் ஷர்மிளா ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கூட்டத்தில் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
இதை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு இனங்களுக்கு குத்தகை தொகை மற்றும் கட்டணம் நிர்ணயம் செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மன்ற கூட்டத்தில் அதிக தீர்மானங்கள் குறைந்த நேரத்தில் நிறைவேற்றுவதாக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
