கோவையில் போலி போன் பே மூலமாக மோசடி: மாணவர் கைது
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள ஒரு செல்ல பிராணிகள் விற்பனை கடையில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கௌதம் (20) தனது நண்பர் ஒருவருடன் சென்றார்.
கடையில் அவர்கள் 5300 ரூபாய் மதிப்பில் பூனைக்குட்டி ஒன்று வாங்கினார்கள். அதற்கு போன் பே மூலமாக பணம் செலுத்தியதாக கடை உரிமையாளர்களிடம் ஆதாரம் காட்டினர். அப்போது கடை உரிமையாளர் தனது அக்கவுண்டில் பணம் வந்து சேரவில்லை எனக் கூறியுள்ளார்.
அதற்கு கௌதம் போன் பே பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களை காட்டிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். கடை உரிமையாளர் அவரை செல்ல விடாமல் தடுத்து கரும்புக்கடை போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில் கௌதம் போலி போன் பே ஆதாரம் காட்டி தப்ப முயன்றது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதமை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது பல்வேறு கல்லூரிகளில் இந்த டூப்ளிகேட் போன் பே இருப்பதாகவும் ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் சில மாணவர்கள் சாப்பிட்டு விட்டு இந்த போலி போன் பே ஆதாரங்களை காட்டி ஏமாற்றி வரும் தகவல் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாநகரம் முழுவதும் டூப்ளிகேட் ஃபோன் பே கூகுள் ப்ளே தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டும். டூப்ளிகேட் செயலிகளை காட்டி ஏமாற்றும் செயல் அதிகமாகி வருகிறது. எனவே ஆதாரங்களை உறுதி செய்ய வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
