நகை பணம் எப்போ தருவாங்க… கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காத்திருந்த புகார்தாரர்கள்..
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட நகை பணம் மற்றும் பல்வேறு பொருட்களை மீட்டு ஒப்படைப்பதாக நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் ஏற்கனவே திருட்டு தொடர்பாக புகார் அளித்திருந்த புகார்தாரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இவர்களுக்கு முறைப்படி திருடு போன பொருட்கள் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகார் தாரர்கள் தங்களது பணம் நகை செல்போன் திரும்ப கிடைக்கும் என கமிஷனர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். போலீஸ் ஸ்டேஷன் வாரியாக திரும்ப வழங்கப்பட வேண்டிய பொருட்கள் தொடர்பாக பட்டியல் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
திடீரென போலீஸ் கமிஷனர் தற்போது எந்த பொருட்களையும் தர முடியாது. இன்னொரு நாள் அழைக்கிறோம் என தகவல் தெரிவித்து விட்டார். இதைத் தொடர்ந்து காத்திருந்த புகார்தாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பச் சென்றனர்.
முன்னதாக அவர்கள் கூறுகையில் இந்த முறை பணம் நகை செல்போன் கிடைத்து விடும் என காத்திருந்தோம். ஆனால் உயரதிகாரிகள் வேறொரு பணியிருப்பதாக கூறி எங்களை அனுப்பிவிட்டனர். எங்களுக்கு எங்களது நகை பணம் செல் போன் விரைவாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
