வேட்பு மனு தாக்கல் செய்ய முன்பதிவு: கோவையில் அனைத்து கட்சி கூட்டத்தில் உத்தரவு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கலெக்டர் பவன் குமார் கோவை மாவட்ட எஸ் பி கார்த்திகேயன், துணை கமிஷனர் தேவநாதன் , தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாவட்ட அளவில் 90 பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை வீடியோ படை அமைக்கப்பட்டு தொடர்ந்து பணி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் புகார் தருவதற்கு ஏதுவாக தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தரும் புகாரின் பேரில் 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளித்த ஐந்து நிமிடத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

20 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து விடுவார்கள். எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக தீர்வு காணப்படும்.

அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்யும் போது உரிய நடத்தை விதிமுறை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களுக்கு முறையாக அனுமதி பெற வேண்டும்.

பிரச்சாரக் கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கு இன்றைக்கு அனுமதி கேட்டு நாளைக்கு பெற முடியாது. 48 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும்.

அதற்கு suvitha.eci.gov.in என்ற ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மட்டுமல்ல வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதற்கு முன்கூட்டியே உரிய இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் தான் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் பத்தாயிரம் ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவு வேட்பாளர்கள் ஐந்தாயிரம் ரூபாய் முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *