கோவையில் ‘ஷேடோ அப்சர்வேஷன் ரிஜிஸ்டரில் ‘ வேட்பாளர்கள் செலவு கணக்கு கண்காணிப்பு…
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் பிரதான கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட, பதிவு பெற்ற கட்சிகள் சார்பில் சுமார் 100 பேர் முதல் 150 பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் முக்கியமான வேட்பாளர்களை தொடர்ந்து கண்காணிக்க, கணக்கு விவரங்களை பெற ஷேடோ அப்சர்வேஷன் ரிஜிஸ்டர் (எஸ்ஓஆர்) என்ற நிழல் கவனிப்பு பதிவேடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தில் வேட்பாளர்களை தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழு நிழல் போல் கவனிக்க வேண்டும்.
செய்யும் செலவுகளை உரிய முறையில் வேட்பாளர் தினசரி கணக்கு புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். வேட்பாளர் செய்யும் செலவுகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் புதிதாக வங்கி கணக்கு துவக்கியிருக்க வேண்டும்.
செலவு விவரங்களை ஒப்பீடு செய்யும் போது வேட்பாளர் செலவுகளை மறைத்து, குறைத்து காட்டியிருந்தால் 48 மணி நேரத்திற்குள் அவருக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்த வேண்டும். வேட்பாளர் செய்யும் செலவுகள், வாக்காளர்கள், பொதுமக்களுக்கு அவர் பரிசாக, இனாமாக ஏதோ ஒரு வகையில் எந்த பொருட்கள் கொடுத்தாலும், பணம் கொடுத்தாலும் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
தேர்தல் பிரிவினர் வேட்பாளரை பின் தொடர்ந்து வீடியோ ஆடியோ பதிவு செய்யலாம். இதை வேட்பாளர் தரப்பில் தடுக்க கூடாது. இந்த வீடியோ, ஆடியோ, செலவின ரசீது முக்கிய ஆதாரமாக எடுக்கப்படும். மேலும் எந்த பொருட்கள் வாங்கினாலும் வேட்பாளர்கள் அந்த பொருட்களுக்கு கடைகளில் இருந்து பெற்று கொண்ட ரசீது, விலை ரசீது வாங்கி வைத்திருக்க வேண்டும்.
பிரியாணி, சாப்பாடு, புரோட்டா வாங்கி விட்டு பில் தரவில்லை என வாய்மொழி கணக்கு காட்ட கூடாது என தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. பில் தராவிட்டால் தேர்தல் பிரிவினர் அந்த பொருட்களுக்கான விலையை கணக்கிட்டு ஷேடோ அப்சர்வேஷன் பதிவேட்டில் எழுதி விடுவார்கள்.
மாவட்ட அளவில் அனைத்து தொகுதிகளிலும் இந்த பதிவேடுகளை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வேட்பாளர்களின் செலவுகளை எழுதும் பணி நேற்று முதல் துவங்கியது, மாவட்ட அளவில் 270 ஷேடோ ரிஜிஸ்டர் பெறப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 25 பதிவேடு என 250 பதிவேடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
